ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே.... பாரம்பரிய விளையாட்டுகள்....ஞாபகம் வருதே...
Tamil Parambariya Vilaiyattukal - தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் மறந்து போயினவா?...ஒவ்வொருவிளையாட்டிலும் ஒரு திறன் அறிதல் என்பது இருந்தது...காலம் மாறிப்போச்சு...என்ன செய்ய?;
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளின் படங்கள் (கோப்பு படம்)
Tamil Parambariya Vilaiyattukal -மனிதர்களுக்கு மறதி என்று ஒன்று இல்லாமல் இருந்தால் அவர்களால் நிம்மதியாக வாழமுடியுமா? என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்காமல் தவித்து வருகிறோம். ஒருசில நிகழ்ச்சிகளை , செயல்பாடுகளை நாம் கட்டாயம் மறந்தாக வேண்டும். அப்போதுதான் நிகழ்கால வாழ்க்கையினில் கவனம் செலுத்த முடியும். நினைவாற்றல் என்பது மனிதர்களுக்கு முக்கியம் என்று சொன்னாலும் ஒரு சில விஷயங்களை நாம் எளிதில் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.
செயல்பாடுகள், நிகழ்ச்சிகளை மறந்துவிடலாம். ஆனால் நாம் அக்காலத்தில் விளையாடிய விளையாட்டுக்கள், நண்பர்கள் , தொழில்நுட்ப சாதனங்கள், பொழுதுபோக்கு சாதனங்களை மறந்துவிட்டால் எப்படி... கொஞ்சம் மலரும் நினைவுகளுக்கு பின்நோக்கி செல்லுங்கள்...உங்களுக்கு ஞாபகம் வரும்...அதுதான் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
பாரம்பரிய விளையாட்டுகள்
ஐந்தாங்கல்
ஐந்து கற்களை வரிசையாக கைகளின் மேல் வைத்து ஆடக்கூடிய விளையாட்டு (கோப்பு படம்)
அக்காலத்தில் வாழ்ந்த சிறுவர், சிறுமியர்களிடம் இவ்விளையாட்டானது புகழ்பெற்றது. அந்த வகையில் நான்குஅல்லது 5 பேர் ஒன்று கூடி ஒரு இடத்தில் அமர்ந்து இந்த விளையாட்டினை விளையாடுவார்கள். இது போன்ற விளையாட்டுகள் ஒற்றுமைப்பண்பையும், கூடி விளையாடும்குணத்தினையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்தன. அக்கால விளையாட்டுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு வகையில் ஒரு ஆழமான கருத்து என்பது இருந்தது.
பல்லாங்குழி சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கக்கூடிய ஒரு விளையாட்டு (கோப்பு படம்)
பல்லாங்குழி
பல்லாங்குழி என்பது மரத்தால் குழிக் குழியாக செய்யப்பட்ட பொருளில் விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டுகளில் விளையாடும் குழந்தைகளின் அறிவுத்திறனானது மேம்படும். சிந்தனையைத் துாண்டும் விதமான ஒரு வகை விளையாட்டு. இவ்விளையாட்டினை இருவர் மட்டுமே விளையாடுவார்கள். அதுவும் யோசித்து யோசித்துவிளையாடும்விளையாட்டு. மனதை ஒருமுகப்படுத்தி சிந்தித்து விளையாடும் விளையாட்டாக இது இருந்தது. இக்காலத்திலும் இது இருந்தாலும் அவ்வளவாக காணமுடிவதில்லை.ஏதாவது ஒரு வீட்டில் அக்கால பாட்டிகளுடன் பேரன் , பேத்திகள் விளையாடுவதைக் காணமுடிகிறது.
நொண்டி விளையாட்டு
ஒரு தெருவில் குடியிருக்கும் குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டு. ஒருவரை முதலில் தேர்ந்தெடுப்பார்கள். அதன் பின்னர் தேர்ந்தெடுக்கும் நபர் நொண்டிக்கொண்டே அவர்கள் நிர்ணயித்த வளாகத்தினுள் தொடர்ந்து வந்து அவர்களைத் தொட வேண்டும். இவ்விளையாட்டானது பார்ப்பதற்கு சிரிப்பை வரவழைத்தாலும் இது ஒரு வகையான மறைமுக பயிற்சியாகவே இருந்தது. அதுவும் நொண்டுபவர்களை பார்க்க வேண்டுமே. உடல் வியர்த்து மேல்மூச்சு, கீழ் மூச்சு, வாங்கும் . அந்த வகையில் சிறுவர்களைத்துரத்தி , துரத்திப் பிடித்து விளையாடும் விளையாட்டு.
குழந்தைகளிடையே ஒற்றுமையுணர்வு, எதையும் தாங்கும் மன வலிமை ஆகியவைகளை உண்டாக்கும் ஒரு வகையான விளையாட்டு (கோப்பு படம்)
குதிரை தாண்டுதல்
இந்த விளையாட்டானது வரிசையாக சிறுவர்களை குனியச்செய்து ஒவ்வொருவராக தொடர்ந்து தாண்டும் விளையாட்டு. இதுபோல் சங்கிலித் தொடராக குனிந்து குனிந்து நிமிர்வதால் மறைமுக உடற்பயிற்சி விளையாட்டு என்று கூட சொல்லலாம். இதில் ஒருவேடிக்கை என்ன வென்றால் தாண்டுபவர் நன்கு ஸ்டெடியாக தாண்டும்போது குனிந்தவர் திடீரென கீழே குனிந்து விடுவார். அப்போது தாண்டுபவர் நிலைக் குலைந்து தடுமாறுவார். இதுபோல்நகைச்சுவை காட்சிகளும் இவ்விளையாட்டில் அவ்வப்போது அரங்கேறும். தொடர்ந்து இரண்டு கால்களையும் அகட்டி வைத்துக்கொண்டு தாண்டுவதால் நல்ல திடமான உடற்பயிற்சியாகவும் இவ்விளையாட்டானது இருந்தது.
கோலிக்குண்டு விளையாட்டினைப் பொறுத்தவரை மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே நீங்கள் நினைக்கக்கூடிய கோலியினை அடிக்க முடியும் (கோப்பு படம்)
கோலிக்குண்டு விளையாட்டு
கோலி விளையாட்டைப் பொறுத்தவரை கோடை விடுமுறையில் தான் ஆரம்பிக்கும். கலர் கலரான கோலிகள் கடைகளில் 5 பைசா, 10 பைசா என சைசுக்கு தகுந்தாற்போல் விற்கும். இதனை ஒவ்வொருவரும் வாங்கி டிராயரில் போட்டுக்கொண்டு எங்கு விளையாடுகிறார்களோ அங்கு அந்த கோலிக்குண்டை பயன்படுத்தி விளையாடிக்கொள்வார்கள். தரையில் கோடுபோட்டு வரிசையாக கோலிக்குண்டுகளைநீளமாக அடுக்கி வைத்து விடுவார்கள். ஒரு தோராயமான துாரத்தினை நிர்ணயித்து அங்கிருந்து வரிசையாக வைக்கப்பட்ட கோலிக்குண்டினைப் பார்த்து அடிக்க வேண்டும். அடிக்கும்போது கோலிகள் சிதறி நாலாபுறமும் ஓடும். கட்டத்தினை விட்டு வெளியேறும் கோலிக்குண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து விளையாடுபவரின் திறமையானது தீர்மானிக்கப்படும். சிதறிய குண்டுகள் போக எஞ்சியுள்ளதை மீண்டும் நடுக்கோட்டில் வைத்து அடுத்தவர் அடிப்பார். இதுபோல் சிந்திக்கத்தக்க விளையாட்டாக இது இருந்தது.
குழந்தைகளின் திறமைக்கு ஒரு சவால்...யார் பம்பரம் அதிக நேரம் சுற்றுகிறது. சுற்றும்போது கயிறால் லவட்டி கையால் சுற்ற வைப்பது என்ன ஒரு திறமை.... அப்பப்பா... அப்படியே சந்தோஷம்....(கோப்பு படம்)
பம்பரம்
இதுவும் ஒருகோடைக்கால விடுமுறை விளையாட்டாகவே இருந்தது. அதாவது கலர் கலரான பம்பரங்களும் கயிறுகளும் ஏப்ரல் மாதத்திலேயே தொங்க விடுவார்கள். அவரவர்களுக்கு தேவையானதை அப்போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். பின்னர் பரீட்சை முடிந்து லீவ் விட்ட பின்னர் பம்பர விளையாட்டு ஜரூராகிவிடும். சாப்பிடுவதற்கு கூட நேரமிருக்காது என்றால் பார்த்துக்குங்களேன்...
அக்கால விளையாட்டுக்களை விளையாடியவர்கள் அவர்கள் உயிர் இருக்கும் வரை சொல்லி மகிழலாம். அந்த வகையில் அறிவை வளர்க்கும் விதமாக, சிந்தனையைத் துாண்டும் விதமாக, ஒற்றுமைப்பண்புகளை வளர்க்கும் விதமாக, மறைமுக உடல் மட்டும் மனப்பயிற்சிகளாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுக்கள் காலத்தினால் மறைந்து போயின.
இக்கால இளைஞர்கள் சிறுவர்கள், சிறுமியர்களுக்கு உடல் அளவில் எந்த விளையாட்டுக்களும் இல்லாததுதான் காலத்தின் கொடுமை. பள்ளி விட்டு வந்தவுடன் பல வகுப்புகள் ,அக்குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே கிடையாது. அப்படியே விளையாடினாலும் கம்ப்யூட்டர் அல்லதுஸ்மார்ட் போனில் உள்ள வீடியோ கேம் விளையாட்டுத்தான்.இதனால் கண்கள் பாதிப்படைவதுடன் மனசும் சோர்வடைந்துவிடுவதுதான் ஹைலைட்டான விஷயமே.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க...
எனவே பெற்றோர்களே, அக்காலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க. அவர்களுக்கு அது விநோதமாக இருக்கலாம். ஆனால் அனைத்து வகைகளிலும் பயன்தரும் விளையாட்டாகவே இது இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2