தலை முடியை கண்டிஷனிங் செய்வதன் அவசியம் தெரிஞ்சுக்குங்க!
Reasons for conditioning scalp hair- தலை முடியை கண்டிஷனிங் செய்வதன் அவசியம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.;
Reasons for conditioning scalp hair- தலைமுடியை கண்டிஷனிங் செய்தல் (கோப்பு படம்)
Reasons for conditioning scalp hair- தலை முடியை கண்டிஷனிங் செய்வதன் அவசியம்
ஷாம்பு போட்ட பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, முதலில் முடியின் அமைப்பு மற்றும் ஷாம்புவின் செயல்பாட்டைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். ஒரு மனிதனின் தலைமுடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. இது பல அடுக்குகளை கொண்டுள்ளது. வெளிப்புற அடுக்கு ‘கியூட்டிகிள்’ (Cuticle) என அழைக்கப்படுகிறது. இந்த கியூட்டிகிள் அடுக்கு செதில் போன்று ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டிருப்பதால், முடிக்கு இயற்கையான மென்மையும் பளபளப்பும் கிடைக்கிறது.
ஷாம்பு என்பது முடியையும் உச்சந்தலையையும் சுத்தம் செய்யும் ஒரு அழகு சாதனப் பொருளாகும். இதிலுள்ள சர்பாக்டன்டுகள் (surfactants) எனப்படும் வேதிப்பொருட்கள், தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் (sebum), அழுக்கு, தூசு, இறந்த செல்கள் மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களின் படிவங்கள் ஆகியவற்றை நீக்கி, முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
ஆனால், சர்பாக்டன்டுகள் தங்கள் வேலையைச் செய்யும்போது, முடியிலுள்ள இயற்கையான எண்ணெயையும் அகற்றி விடுகின்றன. இதனால் முடியின் கியூட்டிகிள் அடுக்குகளில் விரிசல் ஏற்பட்டு, முடி சொரசொரப்பு, வறட்சி, பிளவு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. மேலும், ‘நெகட்டிவ்’ மின்னூட்டம் கொண்ட சர்பாக்டன்டுகள் முடியில் தங்கி, முடியை மின்னூட்டத்துடன் வைத்து, சீப்பால் சீவும்போது முடியை உடையச் செய்கின்றன.
இந்தப் பிரச்சனைகளைத் தடுக்கவே கண்டிஷனர் கைகொடுக்கிறது. கண்டிஷனர்கள் பொதுவாக நேர்மறை மின்னூட்டம் கொண்டவை. இவை ஷாம்புவால் ஏற்பட்ட எதிர்மறை மின்னூட்டத்தை நடுநிலையாக்கி, முடி உடைவதைக் குறைக்கின்றன. கண்டிஷனர்களில் உள்ள சிலிக்கோன்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஈரப்பதமூட்டும் பொருட்கள் தலைமுடியை மீண்டும் ஈரப்பதமாக்குகின்றன. தவிர, கியூட்டிகிள் அடுக்குகளை சீராக்கி முடியைப் பாதுகாக்கும் ஒரு படலத்தையும் அவை உருவாக்குகின்றன. இதன் விளைவாக, முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், சிக்கில்லாமலும் இருக்கும்.
ஷாம்பு தலைமுடிக்கு வழங்கும் சுத்தத்தையும், கண்டிஷனர் வழங்கும் பாதுகாப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், கண்டிஷனர் என்பது ஷாம்புவின் இன்றியமையாத நிரப்புப் பொருள் என்று சொல்லலாம். தலைமுடி சுத்தமாவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை ஈரப்பதத்துடனும், வலிமையுடனும் வைத்துக்கொள்வது.
கண்டிஷனரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?
கண்டிஷனரைப் பொறுத்தவரை, ‘எவ்வளவு அதிகமோ அவ்வளவு நல்லது’ என்ற விதி பொருந்தாது. முடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கு ஏற்ப சிறிதளவு கண்டிஷனர் எடுத்துக் கொண்டால் போதுமானது.
முதலில் முடியை ஷாம்பு கொண்டு நன்கு அலசிய பின், தண்ணீரை இலேசாகப் பிழிந்து விடுங்கள்.
கண்டிஷனரை முதலில் முடியின் நுனிப்பகுதியில் தடவி, பிறகு மெதுவாக வேர்களை நோக்கிப் பரப்புங்கள். தலைமுடியின் வேர்ப்பகுதிக்கோ, உச்சந்தலைக்கோ கண்டிஷனர் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படித் தடவினால், அவை எண்ணெய்ப்பசை தோற்றத்தை ஏற்படுத்தும்.
கண்டிஷனரை சில நிமிடங்கள் முடியில் ஊற விடுங்கள்.
இறுதியாக, குளிர்ந்த நீரில் முடியை நன்றாக அலசி எடுங்கள்.
கண்டிஷனரை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தலாம்?
வறண்ட முடி, சுருள் முடி, வண்ணம் தீட்டப்பட்ட முடி ஆகியவற்றைக் கொண்டவர்கள் தினசரி தலைக்கு குளித்தாலும் கூட, தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்தலாம். எண்ணெய் பசையுள்ள முடியைக் கொண்டவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் ஷாம்பு போட்டுக் குளிக்கும்போது கண்டிஷனர் பயன்படுத்தினால் போதுமானது.
கண்டிஷன் செய்வதன் பலன்கள்
முடியை மென்மையாக்குகிறது: கண்டிஷனர் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. முடியின் கியூட்டிகிள் அடுக்குகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து, முடிக்கு பளபளப்பையும், மென்மையையும் அளிக்கிறது.
சிக்கலை நீக்குகிறது: முடிக்கு போதுமான ஈரப்பதம் இல்லாதபோது, அது முடிச்சுகளாகி, சீவுவது கடினமாகிவிடும். கண்டிஷனர் முடியை ஈரப்பதமுள்ளதாக வைத்து உராய்வைத் தடுப்பதால், சீப்புவது எளிதாகிறது.
முடி உடைவதைத் தடுக்கிறது: முடி வறண்டு, கடினமாக, நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்கும்போது, அது எளிதில் உடையத் தொடங்கும். கண்டிஷனரில் உள்ள ஈரப்பதமூட்டிகள் இந்த வறட்சியை நீக்கி முடி உடைவதைத் தடுக்கின்றன.
முடி நுனியில் ஏற்படும் பிளவை சரி செய்கிறது: கண்டிஷனர்கள் முடிநுனியில் ஏற்படும் பிளவை முழுவதுமாக நீக்காவிட்டாலும், பார்ப்பதற்கு பெரிய அளவில் அதைக் குறைத்து, முடியின் தோற்றத்தைச் சீராக்குகின்றன.
ஸ்டைலிங் செய்வதை எளிதாக்குகிறது: கண்டிஷனர் போடப்பட்ட முடியை நேராக்குதல் அல்லது சுருட்டுதல் மிகவும் எளிதாக இருக்கும்.
வெப்பக் கருவிகளின் பாதிப்பிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது: ஹேர் ட்ரையர், ஸ்ட்ரைட்னர் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது, அவற்றின் வெப்பத்திலிருந்து முடியைப் பாதுகாக்க கண்டிஷனர் உதவுகிறது.
உங்கள் முடிக்கு ஏற்ற கண்டிஷனரைத் தேர்ந்தெடுத்து, அதைச் சரியான முறையில் பயன்படுத்தும்போது, அது பல வழிகளில் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.