Psychological stress - பணியிடத்தில் பெண்களுக்கு அதிகரிக்கும் மன அழுத்தம்; தவிர்க்க வழிகள் என்ன?
Psychological stress - வீட்டையும் கவனித்துக்கொண்டு அலுவலகத்திலும் பணிசெய்வது என்பது பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்வது போன்ற மிக நெருக்கடியான நிலைதான். எனினும் பணியிடத்தில் மன அழுத்தம் தவிர்க்கும் வழிமுறைகளை தெரிந்துக்கொள்வோம்.;
Psychological stress- பணியிடத்தில் பெண்களுக்கு அதிகரிக்கும் மன அழுத்தம் (கோப்பு படம்)
Psychological stress - இந்தியாவில் 87 சதவீத பெண்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன.
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பணியாற்றும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. பல்வேறு துறைகளில் வேலையில் இருக்கக்கூடிய பெண்கள், ஆண்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக் கொள்வது,
வீட்டு வேலைகள் மற்றும் பணியாற்றும் இடத்தில் பிரச்சனை என பல்வேறு பணிச்சூழலை கவனித்துக் கொள்வதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 87 சதவீத பெண்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் என்பது ஒரு நபருக்கும் சுற்றுச்சூழலுக்கு இடையில் நிலவக்கூடும் சிக்கலான உறவு என்றாலும், சமாளிக்க முடியாத போது தீவிரமான உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். ஆண்களை விட பெண்கள் தான் பல்வேறு காரணங்களால் பணியிடத்தில் அதிக மன உளைச்சலோடு பயணிக்கிறார்கள். இதோ என்னென்ன மன உளைச்சலை பெண்கள் சந்திப்பார்கள்? எப்படி சமாளிக்க வேண்டும்? என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.
பணியிடத்தில் அதிகரிக்கும் மன அழுத்தம்:
பெண்கள் என்ன தான் தைரியமாக இருந்தாலும் புதிய அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரு விதமான பதட்டத்தை அனுபவிப்பார்கள். நாம் சரியாக பணியாற்றினாலும் தவறாக இருந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்படக்கூடும்.
வெளியில் யாரிடமும் மனம் விட்டு பேசாத போது மன அழுத்தம் அதிகரிக்கும். எவ்வித தவறுகள் இல்லாமல் பணியை மேற்கொண்டாலும் ஒருவிதமான மன அழுத்தம் ஏற்படும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கொடுக்கும் தொந்தரவுகளும் பெண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஒரு சில அலுவலகங்களில் பாலின பாகுபாடு காரணமாகவும் பெண்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
பாலியல் ரீதியாக தொந்தரவுகள் ஏற்பட்டாலும் வெளியில் சொன்னால் பணியாற்ற முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இதுவும் பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக நேரம் பணியாற்றும் சூழல் ஏற்படும் நேரத்தில், குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்ற யோசனையும் பெண்களின் நிம்மதியைக் கெடுக்கும்.
தவிர்ப்பது எப்படி?
இது போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பெண்களின் தைரியம் மட்டுமே பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்க தீர்வாக அமையும். பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு பணிக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தையும், வேலையையும் சமநிலைப்படுத்தி பணியாற்ற வேண்டும்.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் தூக்கமின்மையை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தைத் தவிர்க்க நல்ல தூக்கம் அவசியம். இதோடு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் உங்களை ஈடுபடுவதற்கு முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா, போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.