மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாக வரும் பொங்கல்
Pongal Tamil Kavithai-தை மகள் வருகின்றாள். மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாக பேர் கொழிக்க வந்த பெட்டகமே தைப் பாவாய் என வரவேற்கும் கவியரசர் கண்ணதாசன்;
Pongal Tamil Kavithai
Pongal Tamil Kavithai
வயல்களில் ஆண்டு முழுவதும் பாடுபட்ட பலன்களை அறுவடை செய்யும் தை மாதத்தின் தொடக்க நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
வயலில் பயிர்கள் விளைந்து அறுவடையாவதில், விவசாயிக்கு மட்டுமின்றி இயற்கைக் கூறுகளுக்கும் பங்குண்டு. பயிர் உற்பத்திக்கு ஆதாரமான ஒளியைத் தரும் சூரியனுக்கும், நீரைத் தருவதாகக் கருதப்படும் இந்திரனுக்கும், மனிதனுடன் இணைந்து உழைக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழாவைத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். விவசாய கிராமங்களில் இவ்விழாவை நன்றி செலுத்தும் விழா என்று குறிப்பிடுகின்றனர்.
பழங்கால தமிழர்கள் பூந்தொடை விழா, இந்திர விழா, உள்ளி விழா, தை நீராடல், தைப்பொங்கல் எனப் பலப்பல விழாக்களைக் கொண்டாடியிருந்தாலும், இன்று எஞ்சியிருக்கும் ஒரே பெரும் கொண்டாட்டம் பொங்கல் மட்டுமே.
பொங்கல் விழா குறித்து சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.
சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட மரபினை கூறுகிறது. இக்காப்பியம் பொங்கல் பண்டிகை பற்றிக் குறிப்பிடும் பொழுது,
மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்
என குறிப்பிடுகிறது
முன்னாள் முதல்வர் கருணாநிதியும் பொங்கல் வாழ்த்துக் கவிதை படைத்துள்ளார்
வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!
வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!
தெருவெல்லாம் தோரணங்கள்,
திண்ணைகளில் கோலங்கள்,
தேன் கலந்த மழலை மொழியும்
ஊன் கலந்து உயிரோடு இணையும்
கோலமங்கைக்கு குளிர் விழியும்
காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று
சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!
ஓலிமிடு கடல் போல்
உலகெங்கும் பரவட்டும் தமிழர் புகழ்!
என கூறியுள்ளார்
கவிஞர் கண்ணதாசனின் பொங்கல் பற்றிய கவிதை
அறவழி வாழ்க்கை பண்பு
அகம்புறந் தூய்மை வாய்மை
உறவுபார்த் துண்ணல், கையில்
உளவரை பகிர்ந்து வாழ்தல்
குரவரைப் பணிதல், கொண்ட
குலமகள் இதயங் காத்தல்
நெறியெனப் பொங்கல் நாளை
நிறைவுறத் தமிழர் வைத்தார்!
எவ்வழி மனமோ வாழ்வும்
அவ்வழி யேதான் போகும்
எவ்வழி அறிவோ நெஞ்சும்
அவ்வழி யேதான் செல்லும்
செல்வழி சிறந்த நெஞ்சு
சேர்ந்துவாழ் கின்ற வாழ்வு
நல்வழி தோன்றும், தோன்றி
நலமுறப் பொங்கல் நாளே!
தை மகள் வருகின்றாள்- அத்
தை மகள் வருகின்றாள்
மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குத் தாயாக
பேர் கொழிக்க வந்த
பெட்டகமே தைப் பாவாய்
நெய்வார் கை நூலை
நிலத்தே விரித்ததுபோல்
கை நீட்டி வாராயோ கதிரொளியே
என பாடியுள்ளார்
பொங்கல் பற்றி பல கவிஞர்கள் கவிதை படைத்துள்ளனர். அவற்றில் சில உங்களுக்காக
மாடுகட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என
ஆனை கட்டி போரடித்த
அழகான தமிழ் நிலத்தில்
பொங்கி வரும் புதுப் புனலாய்..- மணம்
தங்கி வரும் புதுமலராய்..வரம்
வாங்கி வரும் வசந்தமாய்
பொங்கட்டும் இன்பம் - என்றும்
தங்கட்டும் வளமெலாம்
நலம் சேர்ந்து வளம் சூழ
பொங்கட்டும் மகிழ்ச்சியென
வாழ்த்துகிறேன் பொங்கல் திருநாளில்...
பாரினில் எங்கும் மக்கள்
பலநலம் பெற்று வாழ
சீரிய வழியில் எல்லாம்
சிறப்புகள் மேன்மே லோங்க
மார்கழித் திங்கள் சென்று
மலர்ந்த தைத்திங்கள் நாளில்
ஆர்வமோ டளித்தேன் இந்த
அணிமிகு பொங்கல் வாழ்த்தை!
வருகிறது புதுப்பொங்கல்
வளம் தரும் தைப்பொங்கல்
காளைகள் சீறிப்பாய
காத்துக்கிடக்கு வாடி வாசல்
அரிசிமாவில் கோலமிட்டு
ஜொலிக்கிறது வீடு வாசல்
மஞ்சள் கொத்தோடு,
மாமரத்து இலையோடு,
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு,
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால் பொங்க
புன்னகை தவழும் முகத்தோடு
பொங்கி வரும் பொங்கலிது
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2