வயிற்று வலி? அலட்சியம் வேண்டாம்! கணைய அழற்சியின் அபாயமாக இருக்கலாம்!
வயிற்று வலி? அலட்சியம் வேண்டாம்! கணைய அழற்சியின் அபாயத்தை அறிந்து கொள்ளுங்கள்;
வயிற்று வலி - ஒரு சாதாரண அஜீரணம் என்று நினைத்தீர்களா? அது உயிருக்கு ஆபத்தான கணைய அழற்சியாக இருக்கலாம்!
வயிற்று வலி என்றாலே, அஜீரணக் கோளாறு அல்லது வாயு பிரச்சனை என்று எளிதாக எடுத்துக் கொண்டுவிடுகிறோம். சில உணவுகளைக் கட்டுப்படுத்தினால் சரியாகிவிடும் என நினைக்கிறோம். ஆனால், சிலநேரங்களில் அந்த வயிற்றுவலி உயிருக்கே ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றில் முக்கியமானது கணைய அழற்சி (Pancreatitis).
சென்னையைச் சேர்ந்த மகேஷ் எனும் நடுத்தர வயது ஆண் ஒருவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சுக்கு நீர் போட்டு குடித்தால் சரியாகிவிடும் என நினைத்து கடைசியில் உயிரையே இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கணையம் - என்ன செய்கிறது?
நம்முடைய செரிமான மண்டலத்தின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் கணையம். இது வயிற்றுக்குப் பின்புறம் இருக்கும் ஒரு சுரப்பி ஆகும். உணவில் உள்ள கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்தை செரிமானம் செய்ய தேவையான நொதிகளை (enzymes) கணையம் சுரக்கிறது. உடலில் இன்சுலினை உற்பத்தி செய்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதும் கணையத்தின் பணிதான்.
கணைய அழற்சி என்றால் என்ன?
கணையத்தில் ஏற்படும் வீக்கமே கணைய அழற்சி. சிலருக்கு இது தீவிர வலியுடன் திடீரென ஏற்பட்டு சில நாட்கள் நீடிக்கும். இதை தீவிர கணைய அழற்சி (acute pancreatitis) என்கிறோம். வேறு சிலருக்கு இது பல ஆண்டுகளாக நீடித்து, நாள்பட்ட பிரச்சனையாக மாறும், இதை நாட்பட்ட கணைய அழற்சி (chronic pancreatitis) என்கிறோம். இந்த இரண்டு வகைகளிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
எதனால் வருகிறது?
- பித்தப்பையில் கற்கள் (Gallstones) உருவாகுவது முக்கிய காரணங்களில் ஒன்று.
- அதிகப்படியான மது அருந்துதல் இதற்கான மற்றொரு முக்கிய காரணம்.
- சிலருக்கு இரத்தத்தில் கொழுப்பு அளவு (triglyceride) அதிகமாக இருப்பதும் கணைய அழற்சியை ஏற்படுத்தும்.
- புகைப்பழக்கம், சத்துணவு பற்றாக்குறை, மரபுவழி காரணங்கள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவையும் கணைய அழற்சிக்கு வழிவகுக்கும்.
அறிகுறிகள் என்னென்ன?
- மேல் வயிற்றில் தீவிரமான வலி, சிலநேரங்களில் முதுகுப் பக்கத்திலும் வலி பரவும்.
- குமட்டல், வாந்தி
- காய்ச்சல்
- நாடித்துடிப்பு அதிகரித்தல்
- தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்
மருத்துவ உதவி எப்போது தேவை?
விடாத வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை தொடங்குகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
சிகிச்சை முறைகள்
- முதலில் வலி நிவாரண மருந்துகள்
- கடுமையான பாதிப்புகளில் குடல் மூலமாக ஊட்டச்சத்து செலுத்துதல் அல்லது நரம்பு வழி ஊட்டச்சத்து கொடுத்தல்.
- தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள்
- ஆரம்ப நிலையிலேயே காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை. பித்தப்பை கற்கள், கொழுப்பு அளவு பிரச்சனை போன்றவை இருந்தால் அதற்கான சிகிச்சை அவசியம்.
- தேவைப்படும் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம்.
- வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம்
- மதுப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துதல்
- கொழுப்பு குறைவான உணவை உட்கொள்ளுதல்
- புகைப்பழக்கத்தை கைவிடுதல்
- உடல் எடையை சீராக பராமரித்தல்
- நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தல்
தீவிர கணைய அழற்சியின் சிக்கல்கள்
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், தீவிர கணைய அழற்சியால் உயிருக்கே ஆபத்தான நிலைமைகள் உருவாகலாம். அவற்றில் சில:
இரத்தக்கசிவு
பல உறுப்புகள் பாதிக்கப்படுதல் (சிறுநீரக செயலிழப்பு, சுவாசக் கோளாறு)
கணையத்தில் சீழ் கட்டிகள் (abscess) உருவாதல்
நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்தல்
முன்னெச்சரிக்கையே சிறந்த தீர்வு
கணைய அழற்சியைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் ஒரே வழி. மது, புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பதுடன், சத்தான சமச்சீர் உணவை உட்கொள்வது அவசியம். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள். கணைய அழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்த நோயை தடுக்கவும், ஆரம்ப நிலையில் கண்டறிந்து உயிர் காக்கவும் முடியும்.