மொபைல்போனில் மூழ்கிக் கிடக்கிறீர்களா? இதை செய்யுங்க, போதும்!
நீங்களோ அல்லது உங்களது குழந்தைகளோ, ஆண்ட்ராய்டு மொபைலுக்கு அடிமையா? அதில் இருந்து நீங்கள் விடுபட, இதோ சில எளிய டிப்ஸ்.;
அழுத குழந்தைகளுக்கு பொம்மை, சாக்லேட் இருந்தால் போதும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. அவர்களை சமாதானப்படுத்த, ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால் போதும்.
இன்றுள்ள ஒரு வயது குழந்தைகள் கூட, ஆண்ட்ராய்டு போனில் தனக்கு வேண்டிய கேம்ஸ் அல்லது யூ டியூப் சேனலில் கார்ட்டூன்களை தேடிப்பார்த்து, கண்டு மகிழ்கின்றன. படிக்கும் வயதுள்ள 8வது, 10வது மாணவர்களின் நிலையை கேட்கவே வேண்டாம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன் லைன் முறையில் நடக்கத் தொடங்கியதும், மாணவ, மாணவியர் கைகளில் மொபைல்போன் இருப்பது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல மணி நேரம் மொபைல் போனில் பாடம் படிப்பதால், கண் பார்வைக்குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின்றன.
இதுதவிர, வீடியோ கேம்ஸ், சமூக வலைதளங்களில் உலவுவது என்று, இன்றைய இளம் மாணவர்கள், அவ்வளவு ஏன் பெரியவர்கள், இல்லத்தரசிகள் கூட, ஆண்ட்ராய்டு போனுக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். சுருங்க சொல்வதானால், செல் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்ற நிலையே உள்ளது.
அறிவியல் வளர்ச்சி, இணையதள புரட்சி போன்றவற்றால், இன்று மொபைல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை மறுப்பதற்கு இல்லை. எதையும் அளவாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லை; அளவுக்கு மீறினால்.... இணையதளத்தில் கொட்டிக் கிடக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள், சிறுவர்கள், இளைஞர்களை ஈர்த்து, நிரந்தரமாக அவர்களை அடிமையாக்குகிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்தவர்கள் தற்போது முழுமையாக நாள் முழுவதும் அதிலேயே மூழ்கியுள்ளனர்.
நமது நாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர், ஆண்ட்ராய்டு போனை உபயோகத்துகின்றனர். 63 சதவீத மாணவர்கள் 7 மணி நேரமும், 23 சதவீத மாணவர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- உங்கள் குழந்தைகளோ, அல்லது நீங்களோ, மொபைல்போன் வாயிலாக சமூக வலைதளங்களில் உலவுதல், அல்லது கேம்ஸ் விளையாடுவதை குறைக்க, இதோ எளிய டிப்ஸ். இவற்றை பின்பற்றுங்கள், நிச்சயம் மாற்றம் வரும்.
- உங்களது மொபைல் போனில், உங்களது பொன்னான நேரத்தை கபளீகரம் செய்யும் தேவையற்ற செயலிகளை நீக்கிவிடுங்கள். அவசியமானதை மட்டுமே வைத்திருங்கள்.
- நாம், மொபைல்போனை மறக்க நினைத்தாலும், "நோட்டிபிகேஷன்" ஒலி எழுப்பி, நம்மை சீண்டிப் பார்க்கும் எனவே, அந்த பட்டனை அணைத்து வைப்பது சிறந்தது.
- நீங்கள் செயலிகளை பயன்படுத்தும் போது, அதற்கு அலாரம் செட் செய்து கொள்ளலாம். 10 நிமிடம் தான் உபயோகிக்க வேண்டுமென்று அலாரம் செட் செய்தால், ஒலி எழுப்பியதும் செயலியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
- முக்கியமான குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வந்தால் மட்டுமே போனை எடுங்கள். டேட்டாவை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்காதீர்கள்.
- சாப்பிடும்போதோ, படிக்கும் போதோ அல்லது உறங்கும் போது கூட, உங்கள் அருகில் போனை வைத்துக் கொள்ளாதீர்கள். இது உடல் நலத்துக்கும் கேடு; கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால், போனை எடுத்து பார்த்து கொண்டிருக்க தோன்றும்.
- பொழுதுபோக்க வேறு வழி இல்லையே; அதனால் தான் மொபைல் போன் எடுக்கிறேன் என்று சாக்குபோக்கு சொல்லாதீர்கள். பொழுதை போக்க, புத்தகம் வாசிப்பு, தோட்டம் வளர்ப்பு போன்ற பிற அம்சங்களில் கவனம் செலுத்துங்கள்.