பெண்களின் உதடு வறட்சியை போக்கும் லிப் பாம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்களின் உதடு வறட்சியை போக்கும் லிப் பாமை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என பார்ப்போம்.;
உதடுகளின் வறட்சியை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவும் அழகு சாதனப் பொருள் லிப் பாம் என அழைக்கப்படுகிறது.
இயற்கையான பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட லிப் பாம் உபயோகிப்பதே சிறந்தது. தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்காமல் வீட்டிலேயே லிப் பாம் தயாரித்து பயன்படுத்த முடியும். இதை உங்கள் தேவைக்கு மட்டும் பதில் அளிக்காமல் அதிகமாக தயாரித்து விற்பனை செய்யலாம். அதைப்பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
முதலில் லிப்பாம் தயாரிப்பது எப்படி அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா?
தயாரிக்க தேவையான பொருட்கள்
பீட்ரூட் ஒன்று, தேங்காய் எண்ணெய் 30 கிராம். தேன் மெழுகு 5.5 கிராம். வைட்டமின் இ எண்ணெய் இரண்டு துளிகள்.
செய்முறை
பீட்ரூட்டை சுத்தம் செய்து மேல் தோலை நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பின்பு சுத்தமான மெல்லிய பருத்தி துணியில் இந்த சாற்றை வடிகட்ட வேண்டும்.இவ்வாறு 7 டேபிள் டீஸ்பூன் அளவு பீட்ரூட் சட்டை தயாரித்து கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தில் பீட்ரூட் சாறு மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் இவை இரண்டையும் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இதை மிதமான தீயில் அடுப்பில் வைத்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும். தண்ணீர் முழுவதுமாக வற்றி எண்ணெய் பிரியும் நேரத்தில் அடுப்பை அணைத்து கலவையை வேறு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.இத்துடன் தேன் மெழுகு சேர்த்து கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் கலவையை வைத்து டபுள் பாய்லிங் முறையில் சூடு படுத்த வேண்டும்.
தேன் மெழுகு முழுவதுமாக கரைந்ததும் வெளியில் எடுத்து அதில் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். கலவை ஆறியதும் நன்றாக கிளறிய பிறகு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி காற்று புகாமல் பத்திரப்படுத்த வேண்டும். கைகளை நன்றாக சுத்தப்படுத்திய பின்பு இந்த லிப் பாம்பை எடுத்து உதடுகளில் மிக மென்மையாக தடவ வேண்டும் இதை மூன்று வாரங்கள் வரை உபயோகிக்க முடியும்.
இந்த லிப் பாம் தயாரிக்கும்போது கடைசியாக ஜியோ கார்டு (geogard ) 221 எனும் பதப்படுத்தியை 0.30 கிராம் அளவு சேர்த்து கலக்கினால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் பயன்படுத்த முடியும்.
இந்த லிப் பாமை நாம் வீட்டில் நாமே தயார் செய்வதால் சுத்தமாகவும் தரமாகவும் இருக்கும். இந்த லிப் பாம் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து அவற்றை மிருதுவாக்கும் உதடுகளில் இருக்கும் கருமையை நீக்கி இயற்கையாக நிறத்தை கொடுக்கும்.
இதை சிறிய அளவில் தயாரிப்பதற்கு அதிக முதலீடு தேவையில்லை. மேற்சொன்ன அளவில் தயாரிப்பதற்கான செலவு மொத்தமே ரூ.200 க்கும் குறைவாகவே ஆகும். இதற்கான மூலப்பொருட்களை அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்க முடியும். இணையத்தின் மூலம் மொத்தமாகவும் கொள்முதல் செய்ய முடியும்.
இப்படி நாம் தயாரிக்கும் லிப் பாமை நாமே முதலில் பயன்படுத்தி பார்த்து விட்டு பின்னர் சந்தைப்படுத்தி விற்பதால் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை பெற முடியும்.