புறாக்கள் குறித்து பலருக்கும் தெரியாத அரிய விஷயங்கள் - நீங்க தெரிஞ்சுக்குங்க!

Information about pigeons- புறாக்கள் பொதுவாக உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்புகின்றன. இவை உயரமான கட்டடங்கள் மற்றும் கோவில் கோபுரங்களில் வசிப்பதை விரும்புகின்றன.;

Update: 2024-04-05 11:34 GMT

Information about pigeons- புறாக்கள் பற்றிய தகவல்கள் (கோப்பு படம்)

Information about pigeons- புறாக்கள் பொதுவாக மணிப்புறா (Dove), மாடப்புறா (Pigeon) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அளவில் சிறியதாக இருக்கும் மணிப்புறாவினை வளர்ப்பது சிரமம். அளவில் பெரியதாக இருக்கும் மாடப்புறாக்களே வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிர முன்னூறுக்கும் மேற்பட்ட புறா இனங்கள் உலகெங்கிலும் உள்ளன. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா ஆகும். இது பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்டிருக்கும்.

புறாக்கள் பொதுவாக உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்புகின்றன. இவை உயரமான கட்டடங்கள் மற்றும் கோவில் கோபுரங்களில் வசிப்பதை விரும்புகின்றன. இவை முட்டையிட உயரமான இடங்களையே தேர்வு செய்கின்றன.

புறாக்கள் கூடு கட்டிய இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவினைத் தன் எல்லையாக நிர்ணயம் செய்து கொள்ளுகின்றன. ஆனால் உணவைத் தேடிச்செல்ல வேண்டிய சமயங்களில் நீண்ட தொலைவிற்கும் சென்று திரும்பும் குணாதிசயம் கொண்டவை. பெரும்பாலும் புறாக்கள் ஒரு இணையுடன் மட்டுமே வாழும் குணம் படைத்தவை.


புறாக்கள் நீண்ட தூரங்களுக்கு பயணித்துத் திரும்பும் ஆற்றல் கொண்டவை. இவை ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து சென்றாலும் அவை தங்கள் கூட்டிற்குச் சரியாகத் திரும்பும் ஞாபகசக்தியைப் பெற்றுள்ளன. புறாக்கள் எங்கு சென்றாலும் தன் இருப்பிடத்திற்கு சரியாகத் திரும்பி வந்து விடும் என்பதால் அவற்றை மனிதர்கள் கூண்டில் அடைத்து வைப்பதில்லை.

புறாக்களின் கால்களில் செய்திகளை காகிதச் சுருள்களாகக் கட்டி அனுப்பும் முறை முற்காலத்தில் இருந்து வந்தது. பயிற்றுவிக்கப்பட்ட புறாவானது அதை உரியவரிடம் ஒப்படைத்து தன் இருப்பிடத்திற்குத் திரும்பும் ஆற்றல் பெற்றது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு புறாவிற்கு எழுபத்தி ஐந்து கிராம் எடையுள்ள செய்திகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு.

புறாக்கள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. முட்டையிடுவதற்காக தாய் தந்தை என இரண்டு புறாக்களும் சேர்ந்த கூடு கட்டுகின்றன. சிறு சிறு குச்சிகளைத் தேர்வு செய்து அலகால் எடுத்துக் கொண்டு வந்து சிறிய கூட்டை அமைக்கின்றன. கூடு கட்டி முடித்ததும் பெண் புறா இரண்டு முட்டைகளை அதில் இடும். பின்னர் பதினெட்டு முதல் இருபத்தியோரு நாட்கள் வரை முட்டைகளை ஆண்புறாவும் பெண்புறாவும் மாறி மாறி அடைகாக்கும். பின்னர் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வரும். மற்ற பறவை இனங்கள் தங்கள் அலகில் உணவைக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுவது வழக்கம். ஆனால் புறாக்கள் உணவை ஊட்டும் முறை அதிசயமானது.


பறவை இனத்தில் புறாக்கள் மட்டுமே தங்கள் குஞ்சுகளுக்கு பாலூட்டுகின்றன என்பது வியப்பான உண்மை. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்துவிடும். புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள க்ராப் (CROP) எனப்படும் தொண்டைப்பையின் உட்புறச்சுவரின் திசுக்களில் சுரக்கத் தொடங்கி விடுகிறது. இந்த பாலானது திரவமாக இல்லாமல் சற்றே கெட்டியாக இருக்கும். இப்படிச் சுரக்கும் பாலை புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து தங்கள் வாய்ப் பகுதிக்குக் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய்ப்புறாவின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன. புறாக்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் இதுதான் பிரதான உணவாகும்.

புறாக்குஞ்சுகள் பிறந்த முப்பத்தி ஐந்தாவது நாளில் இருந்து பறக்கும் சக்தியைப் பெறுகின்றன. இதன் பின்னர் தாமாகவே உணவைத் தேடுவதற்கும் ஆரம்பிக்கின்றன. பறவை இனத்தில் புறாக்கள்  மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கின்றன.

Tags:    

Similar News