தூங்கும் போது தலையணை அவசியமா?

importance of the pillow- தூக்கத்தின் போது தலையணை அவசியமானதா, இல்லையா என்ற கேள்விக்கு பலருக்கும் உள்ளது. தலையணை இல்லாமல் தூங்குவதும் பலரது வழக்கமாக இருக்கிறது.

Update: 2024-07-04 11:39 GMT

importance of the pillow- தூங்கும்போது தலையணை அவசியமா? ( மாதிரி படங்கள்)

importance of the pillow- உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. சிலர் தூங்கும்போது இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். சிலர் தலையணையே இல்லாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி  பார்க்கலாம்.

தலையணை இல்லாமல் தூங்குவதன் நன்மைகள்:

1. தலையணை இல்லாமல் படுத்து உறங்கும்போது முதுகெலும்பின் பொசிஷன் நேராக இருக்கும். இது கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும்.

2. பொதுவாக, தலையணை வைத்து உறங்கும்போது ஒருவர் தன்னை அறியாமலேயே முகத்தை தலையணையில் வைத்து அழுத்துவார். அதனால் அவர் முகத்தில் சுருக்கங்கள் தோன்றும். விரைவில் வயதான தோற்றம் வந்து விடும். ஆனால், தலையணை இன்றி உறங்கும்போது முகத்தில் தேவையில்லாத சுருக்கங்களை ஏற்படுத்தாது. முகச்சுருக்கம் தடுக்கப்படுகிறது.

3. சிலர் தலையணை இன்றி உறங்கும்போது அது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாகக் கருதுகிறார்கள். அதனால் நன்றாக உறங்க முடிகிறது என்றும் கூறுகிறார்கள்.


4. தலையணை இன்றி படுக்கையில் நேராக படுத்திருக்கும்போது தோள்கள் மற்றும் கழுத்துக்கு எந்த விதமான சிரமமும் தரப்படுவதில்லை. அதனால் அந்தப் பகுதிகளில் இருக்கும் தசைகளில் வலியோ சுளுக்கோ ஏற்படுவதில்லை.

5. தலையணை இன்றி உறங்க நினைப்பவர்கள் நேராகப் படுக்க வேண்டும். அதாவது மல்லாக்கப் படுக்க வேண்டும். குப்புறப்படுத்துதோ அல்லது ஒரு சாய்த்து படுப்பதோ கூடாது.

தீமைகள்:

1. சிலர் பக்கவாட்டில், அதாவது ஒரு சாய்த்து தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அவர்கள் தலையணையை பயன்படுத்தாமல் தூங்கும்போது முதுகெலும்பு தவறான பொசிஷனில் இருக்கும். இதனால் முதுகு வலி மற்றும் கழுத்து வலி வரும்.

2. தலையணை இல்லாமல் உறங்கும் சிலருக்கு தலை மற்றும் கழுத்து உடலை விட சற்று உயரமாக இல்லாமல், சமமாக இருப்பதால் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்.

3. ஒருசாய்த்து படுத்து தலையணை இன்றி உறங்கும்போது முதுகெலும்பு வளைந்து போகும். அது அதிகமான முதுகு வலியை ஏற்படுத்தும். மேலும் உடல் வலிக்கும் வழிவகுக்கும்.


தலையணையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

தலையணை மிக உயரமாக இருக்கக் கூடாது. இது கழுத்து வலி, தலை வலி, உடல் வலியை ஏற்படுத்தும் மற்றும் முதுகெலும்பு வளைந்து போகும்.

தலையணை உறையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள அழுக்கு முகத்தில் பட்டு சரும சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். மேலும், தலைமுடி தலையணையில் படும்போது அதில் உள்ள அழுக்கு முகத்தில் பட்டு பருக்கள் தோன்றக்கூடும். எனவே, சுத்தமான தலையணை உறையை உபயோகிப்பது மிகவும் அவசியம்.

தலையணை முரட்டுத்தனமாக, கரடு முரடாக பெரிதாக இல்லாமல்  லேசாக, சிறியதாக இலவம்பஞ்சுத் தலையணையாக இருப்பது நல்லது.

Tags:    

Similar News