காபி பொடியில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?
நாம் பயன்படுத்தும் காபி பொடியில் கலப்படம் இருந்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்
இன்றைய அவசர உலகில் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வுக்கு தினமும் ஒரு கப் காஃபி அல்லது ஒரு கப் டீ குடிப்பதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி, நாம் குடிக்கும் காஃபி தயாரிக்க பயன்படுத்தும் காஃபி பொடியிலும் கலப்படம் இருப்பதாக பல்வேறு புகார்கள் உள்ளன. காஃபி பொடியில் உள்ள கலப்படம் மற்றும் கலப்படத்தை கண்டறிவது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
காஃபி ஒரு கெட்டுப்போகின்ற பொருள் என்று அதன் தயாரிப்பாளர் நிறுவனம் பதிவு செய்துள்ளது. காஃபி கொட்டைகள் பொட்டலத்தைத் திறந்துவிட்டால், எவ்வளவு குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலுமோ, அவ்வளவு விரைவாகப் பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரம். காஃபி கொட்டைகளை குளிர்வான, வெளிச்சம் குறைவான, உலர்வான இடத்தில், அடுப்பு போன்ற வெப்பம் நிறைந்த பகுதிகளிலிருந்து சற்று தூரத்தில், உணவுத் தர காற்றுப்புகா கொள்கலனில் பாதுகாத்து வந்தால், ஓராண்டு வரை அதனை பயன்படுத்த முடியும்.
காஃபி பொடி பொட்டலத்தையும் மேற்கூறிய சூழ்நிலைகளில் பாதுகாத்து வந்தால், 3-5 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்தப் பொட்டலத்தை திறந்துவிட்டால், அதனை குறுகிய காலத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். (அதிகபட்சம் சில நாட்கள்..!) ஸிப்-லாக் கவர்களில் காஃபி பொடியைப் பாதுகாப்பதாக இருந்தால், காஃபி பொடியை அக்கவர்களில் நிரப்பியவுடன், கவரினை அழுத்தி, அதில் உள்ள காற்றை வெளியேற்றி, ஸிப் கொண்டு, மூட வேண்டும்.
காஃபியில் காஃபி உமி, கிளைத் துகள்கள், பருப்பு வகைகள், வறுத்த சோளம், பார்லி, சோயா, ஓட்ஸ் மற்றும் அரிசி, சுத்திகரிக்கப்படாத பழுப்பு சக்கரை, ஸ்டார்ச், மால்டோடெக்ஸ்ட்ரின், களிமண், சிக்கரி ஆகியவை கலப்படம் செய்யப்படுகிறது. இதில், தூய்மையான காஃபி என்ற பெயரில் காஃபி - சிக்கரி மிக்ஸ் தயாரிப்பது ஆகும்.
இந்த கலப்படப் பொருட்களில், சிக்கரி மற்றும் களிமண் கலப்படத்தினை வீட்டிலேயே கண்டறிய இயலும். ஒரு கண்ணாடி டம்பளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, 1/2 தேக்கரண்டி காஃபி பொடியை அதில் போட்டு, ஒரு நிமிடம் கிளறிவிட்டு, 5 நிமிடங்கள் அசைக்காமல் காத்திருக்கவும். காஃபி பொடியில் களிமண் கலந்திருந்தால, களிமண் துகள்கள் டம்ளரின் அடிப்பகுதியில் தேங்கியிருக்கும். ஆனால், தூய்மையான காஃபியில் அப்படி எதுவும் தேங்காது.
ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி காஃபி பொடியை அதில் போடவும். தூய்மையான காஃபி தண்ணீரின் மீது மிதக்கும். ஆனால், தூய்மையான காஃபியில் சிக்கரி கலந்திருந்தால், சிக்கரி தண்ணீரில் மூழ்க ஆரம்பித்து, தண்ணீரின் நிறம் மாற ஆரம்பிக்கலாம்.
தேவையான அளவு சர்க்கரையை முதலில் டபரா செட்டில் எடுத்துக் கொண்டு, காஃபி டிக்காஷனை அந்த சர்க்கரையுடன் கலந்து, அதன் பின்னர் கொதிக்க வைத்த தரமான பாலை கலந்து, டபரா செட்டை மேலும் கீழும் ஆற்றி, நுரை ததும்ப குடித்தால், காஃபி மிகவும் சுவையாக இருக்கும்.
சட்ட அமலாக்கத்தில் காஃபி கலப்படத்தினைப் பொறுத்த வரை சொல்லும்படியான துப்பு துலக்கிய சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில், காஃபி என்ற பெயரில் இருந்த காஃபியை உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்ததில், அது காஃபி சிக்கரி மிக்ஸ் என்பதும், காஃபியின் சதவீதத்தினையும், சிக்கரியின் சதவீதத்தினையும் பதிவு செய்யவில்லை என்பதாலும், தரம் குறைவானது மற்றும் தவறான குறியீடானது என்று பகுப்பாய்வறிக்கை பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஃபியோ அல்லது டீ-யோ, ஒரு நாளுக்கு இரண்டு கப்-களுக்கு மிகாமல் குடித்தால், உடலுக்குத் தொந்தரவு இல்லை என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.