பேய்களெல்லாம் கூட பேய் கதைகள் கேட்குமா? திகிலான இரண்டு நிமிட கதை

பேய் கதைகள் என்கிற விஷயம் இருக்கே அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த ஒரு சமாச்சாரம்.;

facebooktwitter-grey
Update: 2024-03-17 12:50 GMT
பேய்களெல்லாம் கூட பேய் கதைகள் கேட்குமா? திகிலான இரண்டு நிமிட கதை

பேய்க்கதை 

  • whatsapp icon

இருளும் குளிரும் கலந்து ஊரை போர்த்த தொடங்கிய நேரம் புஜ்ஜிமா என்று அழைக்கp4படும் சந்தியா தன் போர்வையை இறுக்கி போர்த்தி கொண்டாள்.. தயாரானாள்.

" அப்பா சீக்கிரம் வா ..பா ஐ ஏம் வெயிட்டிங் கம் பாஸ்ட் "

"ஜஸ்ட் 5 மினிட்ஸ் புஜ்ஜிமா "என்றது சமையல் அறை கதவு

"நோ 3 மினிட்ஸ் ஒன்லி" என்றாள் சந்தியா...

" ஓகே டன் " என்றது மீண்டும் சமையல் அறை.

சந்தியாவுக்கு பள்ளியில் நண்பர்கள் குறைவு ஆனால் வீட்டில் மனோஜ் முதலில் அவளுக்கு மிக சிறந்த நண்பன் பிறகு தான் அப்பா .

3 வருடம் ஆகி விட்டது அம்மா இறந்து ஆனால் அந்த வேதனை வந்து விடாமல் சந்தியாவை வளர்த்து வருவது மனோஜின் மிக பெரிய சாதனை.


சரியாக 7 நிமிடம் கழித்து கதவை திறந்து வந்தவன் "அப்பா ரெடி " என்று போர்வைக்குள் புகுந்தான்..

" நீ எத்தனை நிமிஷம் லேட்டோ அத்தனை கதை சொல்லணும் "

என்று முகத்தில் பொய் கோவம் காட்ட முயற்சித்து தோற்றாள்..

" இது என்ன ஸ்கூலா லேட்டா வந்தா பனிஷ் பண்ண. அப்பா இன்னைக்கு உனக்கு அருமையான கதை சொல்லுவேணா சரியா...? என்ன கதை வேணும் "?

சந்தியாவை பொறுத்த வரை இரவில் இந்த கதை நேரம் முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று ஆரம்பத்தில் தனக்கு தெரிந்த கதைகளை சொல்லி கொண்டு இருந்தவன் அதன் பின் தானே இட்டு கட்டி எதையாவது சொல்ல தொடங்கினான் ஏதோ ஒன்னு ஆக மொத்தம் அவளுக்கு தேவை தினம் கதை.

" இன்னைக்கு பேய் கதை சொல்லுப்பா " என்றாள்

"பேய் கதையா... பயமா இருக்குமே " என்றான் கண்ணை உருட்டி...

" அப்போ பயப்படாத மாதிரி சொல்லு "

"பயப்படாத மாதிரி பேய் கதைக்கு நான் எங்க போவேன் ம்ம் ஒன்னு பண்ணலாம் நான் சொல்லிட்டே வரேன் பயமா இருந்தா சொல்லு நான் நிறுத்திடறன் சரியா"

" ஓகே பா"

அவன் கனைத்து விட்டு கதையை தொடங்கினான்

"ஒரு ஊர்ல ஒரு பேய் இருந்திச்சாம் "

"ஏம்பா ஊர்ல தான் பேய் இருக்குமா சிட்டில இருக்காதா"

அவளை முறைத்தவன் " அதுக்கு சிட்டி பிடிக்காது கதையை கேளு "

" அந்த பேய் அங்க சுடுகாட்டுல டெய்லி நைட்டு அதோடைய கல்லறை மேல வந்து உட்கார்ந்துக்குமாம்"

"அப்பா அதுக்கு பயமா இருக்காதா பா"

" நீ பேய்க்கு பயப்படற ....அது யாருக்கு பயப்படும்?... அதனால நைட் ல உட்கார்துக்கும் நோ பிராப்ளம்"

" அப்பா பேய் சாப்பிடுமாப்பா"

"அதை பேய் கிட்ட தான் கேக்கணும் நீ பேய் கதை கேக்க போறியா இல்லையா?"

" அப்பா பேய்ங்க எல்லாம் கூட பேய் கதைகள் கேக்குமா பா"

" இல்ல நாய் கதை மட்டும் தான் கேட்கும்

புஜ்ஜிமா உனக்கு கதை வேணுமா வேணாமா வேணும்னா இனி கேள்வி ஏதும் கேட்க கூடாது"


"சரிப்பா இனி கேட்கலை " என்று வாயில் விரல் வைத்து கொண்டாள்

அவன் தனது சொந்த தயாரிப்பு கதையை தொடங்கினான்..

" அந்த பேய் டெய்லி தனது சமாதியில் மேலே உட்கார்ந்து போற வரவங்களை எல்லாம் வேடிக்கை பார்க்குமாம் . அதுக்கு ஊருக்குள்ள வரணும்னு ஆசையாம்.

ஒரு நாள் .....ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா போகும் போது அது கூடவே அதுக்கு தெரியாம அவ வீட்டுக்கு வந்துடிச்சாம். அவ வீட்ல ஓடிட்டு இருந்த டிவி யை பார்க்க தொடங்கிடிச்சாம்... அப்புறம் டிவி ல மெகா சீரியல் ஓடறதை பார்த்து அங்கேயே யாருக்கும் தெரியாம நின்னு பாத்துச்சாம் . அப்புறம் நைட் திரும்ப கல்லறைக்கே வந்து தூங்கிடிச்சாம்.

அடுத்த நாள் அதுக்கு அந்த நாடகத்துல மீதி கதை என்னனு தெரிஞ்சிக்க ஆசை வந்துச்சாம் . அது திரும்ப அந்த வீட்டுக்கு போய் கதையை பாத்துட்டு வந்துச்சாம்.. அவ்வளவு தான்.

அதுக்கப்புறம் டெய்லி அந்த நாடகத்தை பார்க்க அவங்க வீட்டுக்கு போய்டுமாம் .

ஒரு நாள் அந்த சீரியல் கதை முடிஞ்சிடிச்சாம். அதனால பார்க்க முடிலேயேனு கோவதுல அந்த சின்ன பொண்ண பிடிச்சிகிச்சாம்..

"அப்பா"

" பேய் டிவி பாக்குமா னு கேக்க போறியா " என்றான் சிரிப்புடன்

"இல்ல பாத்ரூம் போகணும்"

ஹ்ம்ம் சரி வா... "இன்னும் கதைல பயமுறுத்தலா எதுமே சொல்லல அதுக்கே பாத்ரூம் வந்துடிச்சா.." என்று பாத்ரூம் அழைத்து சென்றான்.

வெளியே இருள் நன்கு இறங்க தொடங்கி விட்டு இருந்தது..

குளிர் தனது கரங்களை பரப்ப தொடங்கி இருந்தது.

" அப்பா " என்றது பாத்ரூமுக்குள் குரல்

"புஜ்ஜி" என்றான் மனோஜ்

மீண்டும் "அப்பா"

மீண்டும் "புஜ்ஜி"

மீண்டும் "அப்பா"........

இது அவள் பாத்ரூம் போகும் போது பயப்படாமல் இருக்க வழக்கமாக செய்யும் செயல் தான்.

சிறிது நேரம் கழித்து "அப்பா" என்றாள் அருகில் வந்து.

"ஹே வந்துடியா போலாமா கதை தொடரலாமா"

"போலாம்பா"

படுக்கையில் விழுந்தவர்கள் மீண்டும் கதைக்குள் மூழ்கினார்கள்.

"அந்த பொண்ணுக்கு பேய் பிடித்து விட்டு 'டேய் எனக்கு அந்த சீரியல் போடு' னு சொல்லிச்சாம் அது முடிஞ்சி போச்சி னு சொன்னா கேக்காம திரும்ப திரும்ப அடம் பிடிசிச்சாம் . அதுக்கப்புறம். அவங்க மந்திரவாதியை கூட்டி வந்து..........."

"டொக் டொக் " யாரோ கதவை தட்டின சப்தம் கேட்டு மனோஜ் கதையை நிறுத்தினான்.

"யாரோ கதவு தட்டற சத்தம் கேட்டுச்சா புஜ்ஜிமா"

"எனக்கு ஏதும் கேக்கலியே"

"அப்படியா ...எனக்கு கேட்டுச்சே"

"அப்பா பயமுறுத்தாத பா கதையை சொல்லு"

"சரி சரி கேளு அந்த மந்திர வாதி மந்திரம் போட்டு பூஜை பன்னானாம் .

ஆனா அப்பவும் அது போகலையாம்..

அப்புறம் அந்த மந்திரவாதி... தன்னை விட பெரிய மந்திர வாதி இடம் போய் ஐடியா கேட்டானாம்.

அதுக்கு அந்த சீனியர் மந்திரவாதி, 'அந்த பேய் குடி இருக்கிற கல்லறையை போய் உடைங்க அப்ப தான் அது பயந்து அந்த பொண்ணு உடம்பை விட்டு வெளியே வரும்' னு சொன்னானாம்"


அப்போது அவனை இடைமறித்த சந்தியா, "அட போங்கப்பா நீங்களா எதுனா உளராதிங்க உங்க கதை சுத்த பொய். பேய் ஆவிங்க எப்பவுமே தான் செத்த இடத்துல தான் சுத்திக்கிட்டு இருக்கும் அது உடலை புதைத்த இடத்துலலாம் இருக்காது. அப்படி இல்லனா அது ரொம்ப ஆசை பட்ட பொருள் அல்லது இடம் அல்லது ஆள் பக்கத்துல தான் இருக்கும்" என்றாள்.

குரலில் கொஞ்சம் தீவிர தன்மை இருந்தது.

அவன் அதிர்ந்து போய்.. "வந்து....இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் " என்றான் அதிர்ச்சியோடு..

அப்போது மீண்டும் கதவு தட்டும் சப்தம் மிக வேகமாக கேட்டது..

அது பாத்ரூமில் இருந்து தான் வந்தது..

அவன் பாய்ந்து சென்று பாத்ரூம் கதவை திறக்க உள்ளே அழுத வண்ணம் நின்றிருந்தாள் சந்தியா...

"டாடி நீ என்ன பண்ற.... என்ன உள்ள வச்சி பூட்டிட்டு இவ்ளோ நேரம் திறக்காம இருக்க உன் பேச்சு கா..... "

அவன் அதிர்ச்சியாக ஓடி பெட் ரூம் விளக்கை போடுவதற்கும்.

படுக்கையில் இருந்து ஒரு கருப்பு உருவம் புகையாக கிளம்பி ஜன்னல் வழியே கலைந்து மறைவதற்கும் சரியாக இருந்தது..

சந்தியா குட்டி கேட்ட கேள்வி மட்டும் காதில் மீண்டும் ஒரு முறை ஒலித்தது...

"அப்பா பேய்ங்கெல்லாம் கூட பேய் கதைகள் கேட்குமா பா"

Tags:    

Similar News