மையோனைஸ் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்பு அலுவலரின் எச்சரிக்கையை படிங்க...
முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் பாதுகாப்பானதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.;
பன்னாட்டு உணவுச் சுவை கடந்த பல ஆண்டுகளாக நம் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தாலும், உலகமயமாக்கலுக்குப் பின்னர், பன்னாட்டு உணவுச் சுவை, நமது நாட்டின் உணவுக் கலாச்சாரத்தை சற்று புரட்டித்தான் போட்டுவிட்டது என்றே கூறலாம். அப்படி, வந்த ஒரு பிரஞ்ச் நாட்டு வகை உணவு தான் மையோனைஸ்.
அதாவது சிக்கன் தந்தூரி, வறுத்த சிக்கன், வறுத்த காளிஃப்ளவர், சவர்மாவுடன் என ஒரு “டிப்” உணவாக தவறாமல் வழங்கப்படுவதுதான் இந்த மையோனைஸ். கேரள மாநிலத்தில் சமீபத்தில் அதிர்வை ஏற்படுத்திய உணவு இந்த மையோனைஸ். அதாவது அங்கு சவர்மா சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக முதலில் பதிவு செய்யப்பட்டது. பல சோதனைக்கு பிறகு இறுதியில் மையோனைஸ் தான் காரணம் என்று கண்டறிந்து, கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த மையோனைஸ் குறித்து, உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தரும் விளக்கங்கள் இதோ:
மையோனைஸ் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருள் தான். முட்டை கலந்தும், முட்டையில்லாமல் (Eggless) ஆகிய இரண்டு வகைகளிலும் உண்டு. உணவு எண்ணெய், முட்டை, வினிகர் அல்லது எழுமிச்சை சாறு, சக்கரை, உப்பு (தேவையெனில் கடுகு மற்றும்மிளகுப் பொடி) ஆகியவற்றினைக் கொண்டு, மிக்ஸியில் அரைத்தால், மையோனைஸ் தயார். பெரும்பாலான சவர்மா உணவகங்களில் அவர்களே மிக்ஸியில் அரைத்து மையோனைஸ் தயாரித்துக் கொள்கின்றனர்.
ஆனால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மையோனைஸ் ஆனது, கிருமிநீக்கம் செய்து பதப்படுத்தப்பட்ட முட்டை உள்ளிட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றனர். கிருமிநீக்கம் செய்யப்படாத முட்டை கொண்டு மையோனைஸ் தயாரித்துச் சாப்பிடும் போது, முந்தைய தகவல்களில் கூறியவாறு, முட்டையில் இருக்கும் பாக்ட்டீரியாக்களால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சந்தையில் Eggless மையோனைஸ் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, உரிய லேபிள் விபரங்களுடன் கிடைக்கின்றது. வீட்டில் அல்லது உணவகத்தில் கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டையின் மூலம் தயார்செய்யப்பட்ட மையோனைஸை ஒரு வாரம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம் என்றிருந்தாலும், தயாரித்த அன்றே சாப்பிட்டு முடித்திடுதல் நலம்.
முடிவாக, கிருமிநீக்கம் செய்த முட்டையில் மையோனைஸ் தயாரித்து “டிப்”- ஆகப் பயன்படுத்தினால் நன்று. ஏற்கனவே பொட்டலமிட்டு (Pre-packaged), உணவு பாதுகாப்பு உரிமத்துடன் வரும், மையோனைஸை உணவகங்களில் வழங்கினால், அதனை நாம் சாப்பிடலாம். ஆனால், கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டைகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதிற்கு உத்திரவாதம் இல்லாத்தினால், உணவகத்திலேயே தயாரிக்கப்பட்ட மையோனைஸை நாம் தவிர்ப்பது நலமே என உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.