முட்டையை சமைக்காமல் சாப்பிட்டால் ஆபத்தா? எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்!
முட்டையை சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய உலகில் தவிர்க்க முடியாத உணவுப் பொருள் பட்டியலில் முட்டைக்கு நிச்சயம் இடம் உண்டு. சைவைப் பிரியர்களே சிலர் முட்டை சைவ வகையை சேர்ந்தது என வாதிடும் நிலை தொடர்ந்து வருகிறது. அப்படி இருக்கையில், சிலர் உடல் வலிமைக்காக முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடும் நிலை இருந்து வருகிறது. ஆனால், முட்டையை பச்சையாக சாப்டுவதால் சில ஆபத்துகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு இதோ:
பச்சை முட்டை ஆபத்தா?:
முட்டையை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள அவிடின் என்ற புரதச்சத்து, முட்டையில் உள்ள பயோட்டின் என்ற முக்கிய நுண்ணூட்டச் சத்தினையும், புரதச் சத்தினையும், நமது சிறுகுடலில் உட்கிரகிப்பதைத் தடுக்கின்றது. இதனால், நாம் முட்டை சாப்பிட்டாலும், அதற்கேற்ற அளவு ஊட்டச்சத்து நமக்கு கிடைப்பதில்லை.
பச்சை முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உட்பட அநேக பாக்டீரியாக்கள் (E-coli, Bacillus etc.,) உள்ளன. முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால், இந்தக் கிருமிகளால், நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பாக்டீரியாக்கள் குளிர் மற்றும் மிதமான வெப்பநிலையில் பல்கி பெருகும் தன்மையுடையவை.
அதனால், பச்சை முட்டையை கிருமிநீக்கி பதப்படுத்தாமல், குளிர்பதனப்பெட்டியில் இருப்பு வைத்து, சில நாட்கள் கழித்து, பச்சையாகக் குடித்தாலோ அல்லது மையோனைஸ் செய்து சாப்பிட்டாலோ, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, முட்டையை குளிர்பதனப்பெட்டியில் வைப்பதற்கு முன்னர், கிருமிநீக்கம் செய்து, பதப்படுத்த வேண்டும்.
முட்டையை எவ்வாறு கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்ற செயல்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் பின்னர் முட்டைகளை வைக்க வேண்டும். முட்டைகளுக்கு இடையே சற்று இடைவெளி அவசியம். தண்ணீர் முட்டைக்கு மேல் ஒரு இன்ச் அளவில் தான் இருக்க வேண்டும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரும் வரை மிதமாக சூடுபடுத்த வேண்டும். வெப்பமானி (Thermometer) உதவியுடன் வெப்பநிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். வெப்பமானி இல்லையென்றால், பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறுகுமிழ்கள் (Bubbles) உருவாகும் வரை சூடுபடுத்தலாம்.
முட்டையுள்ள பாத்திரத்தை 60-61 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடங்கள் வரை சூடுபடுத்த வேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும், 65 டிகிரி செல்சியஸிற்கு மேல் சூடுபடுத்தக்கூடாது. (அதற்கு மேலே சென்றால் முட்டை வேக ஆரம்பித்துவிடும்… அவ்வளவுதான்!) வெப்பமானி இல்லாதோர், பாத்திரத்தின் அடியில் சிறுகுமிழ்கள் ஆரம்பித்ததிலிருந்து, 3-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தலாம்.
அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, குழாயிலிருந்து ஓடும் தண்ணீரில் கழுவி, முட்டையை அறை வெப்பநிலைக்குக் கொண்டுவர வேண்டும். அல்லது மிதமான குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்தில் கழுவலாம். அதன் பின்னர், முட்டைகளைத் துடைத்துவிட்டு, குளிர்பதனப்பெட்டியில், குளிரூட்டும் பகுதியில் (cold compartment) வைக்க வேண்டும்.
இவ்வாறு கிருமிநீக்கம் செய்து, குளிர்பதனப்பெட்டியிலேயே 5 வாரங்கள் வரை வைத்திருந்து, அம்முட்டைகளைப் பயன்படுத்தலாம். முட்டையை வாங்கி, அறை வெப்பநிலையிலேயே வைத்திருந்து, 2-3 தினங்களுக்குள் சமைத்து சாப்பிடத் தீர்மானித்திருந்தால், கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரடியாக சமைத்து சாப்பிடலாம்.
பச்சை முட்டைகளைக் கையாண்ட பின்னர், மற்ற உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னரும், ஏதாவது உணவுப் பொருளை (நொறுக்குத் தீனி உட்பட) சாப்பிடுவதற்கு முன்னரும், கை கழுவ வேண்டியது மிகவும் அவசியம். சுருங்கச் சொல்வதானால், முட்டைகளைத் தொட்டுவிட்டால், அடுத்த வேலைக்குச் செல்லும் முன்னர் கை கழுவுதல் வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.