நெய்யிலும் கலப்படம்: எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்...

நாம் வாங்கும் நெய் கலப்படம் இல்லாத நெய் என்பதை எவ்வாறு கண்டறிவது என உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-02-20 05:25 GMT

இன்றைய உலகில் அனைத்துப் பொருள்களிலுமே கலப்படம் என்பது வாடிக்கையாகிவிட்டது. எது உண்மையானது? எது கலப்படம்? என்பதை கண்டறியும் முன்னே காலம் கடந்துவிடுகிறது. குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களில் கலப்படம் என்பதை பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், சமையலுக்கான நெய்யில் எந்தமாதிரியான கலப்படங்கள் நடைபெறுகிறது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.


அவரது விழிப்புணர்வு தகவல்களை காண்போம்:

நெய்யில் கலப்படம் செய்யப்படும் பொருட்களாக வனஸ்பதி, உருளைக் கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் மாவு மற்றும் இதர ஸ்டார்ச், தாவர எண்ணெய்கள், சோயாபீன்ஸ் எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை ஆகும். கலப்பட நெய்யை எவ்வாறு கண்டறிவது என்பதை பார்ப்போம்.

Heat Test என்ற முறையில் நெய்யைக் கடாயில் ஊற்றி காய்ச்சும் போது, அது பழுப்பு நிறமாக மாறினால், அந்த நெய் கலப்படமில்லாதது. ஆனால், நெய்யைக் காய்ச்சும் போது, மஞ்சள் நிறமாக மாறினால், அது கலப்பட நெய் ஆகும்.

அயோடின் சோதனை:

அரை மேஜைக்கரண்டி உருக்கிய நெய்யை கண்ணாடி பாட்டிலில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி, 2-3 சொட்டுக்கள் டிங்சர் அயோடின் சேர்த்தால், கிழங்கு மாவு அல்லது இதர ஸ்டார்ச் சேர்த்த நெய்யானது, நீல வண்ணமாக மாறும்.

பாட்டில் சோதனை:

ஒரு தேக்கரண்டி நெய்யைக் கண்ணாடி பாட்டிலில் எடுத்துக்கொண்டு, அத்துடன் ஒரு சிட்டிக்கை (pinch) சீனி சேர்த்து, நன்கு குழுக்கிய பின்னர், 5 நிமிடங்கள் நிலையாக வைத்திருக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து, கண்ணாடி பாட்டிலின் அடிப்பகுதியில் “சிவப்பு நிறம்” தோன்றினால், அந்நெய்யில், தாவர எண்ணெய் கலப்படம் உள்ளது என்று பொருள்.

Double Boiler Method: நெய்யை “Double Boiler” கொள்கலனில் உருக்கி, அதனை ஒரு ஜாடியில் ஊற்றி, உருக்கிய நெய் உறையும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்த நெய்யானது, தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் என இரண்டு விதமாக தெரியும் வகையில், பிரிந்து உறைந்திருக்கும். சிறிதளவு உருக்காத நெய்யை உள்ளங்கையில் வைத்தால், கலப்படமில்லாத நெய் உடல் வெப்பநிலையின் காரணமாகவே உருகிவிடும். ஆனால், கலப்பட நெய் அவ்வாறு உருகாது.


மேலே கூறிய சோதனைகள் யாவும், ஆரம்ப நிலை சோதனைகள் மட்டுமே. அந்தச் சோதனைகளில் தோல்வி அடையும் நெய் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தால் சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்து, அந்தப் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலிலிருந்து தயாரிக்கப்படும் நெய் ஒரு அற்புதமான உணவு. அதனை சரியான தரத்திலும், சரியான அளவிலும் உண்போமேயானல், ஆரோக்கியத்துடன் வாழலாம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News