மைதா பற்றிய புரிதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் விளக்கத்தை படியுங்கள்...
மைதா குறித்து பல்வேறு எதிர்மறையான தகவல்கள் உலா வரும் நிலையில், சில புரிதல்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கி உள்ளார்.
மைதா மாவு குறித்து உலகம் முழுவதும் பல சர்ச்சைக்குறிய தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. மைதாவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் உள்ளது, ‘அலோக்ஸான்’ உள்ளது, மைதாவால் தயார் செய்யப்படும் உணவை சாப்பிட்டால் சக்கரை நோய் வரும், புற்றுநோய் வரும் என்று சமூக வலைதளங்களின் மூலம் பரவும் செய்திகளுக்கு அறிவயல் பூர்வமான ஆதாரம் எதுவும் தெரிவிக்கபடவில்லை.
இந்த நிலையில், மைதா மாவு என்றால் என்ன? அதில் உள்ள சத்துப் பொருட்கள் எவை? என மைதா பற்றிய புரிதல்களை ஆதாரத்தோடு உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:
மைதா மாவு மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பணியாளர்களை நம்பி இருக்கும் உணவகங்களின் நிலை ‘அந்தோ பரிதாபம்’ என்று சொல்லும் அளவிற்கு உண்மை உள்ளது. மைதாவில் இருந்து தயாரிக்கப்படும் பரோட்டா, நமது உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பது சற்று ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான்.
மைதா என்பது கோதுமையின் (Common Wheat) மையப்பகுதியான என்டோஸ்பெர்ம் என்ற பகுதியினை அரைத்து, சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும். நான்கு வகைகளில் மைதா கிடைக்கின்றது. பொதுவான சுத்திகரிக்கப்பட்ட மைதா (Refined Wheat Flour). செறிவூட்டப்பட்ட மைதா (Fortified Maida). புரதம் நிறைந்த மைதா (Protein Rich Maida). துரம் கோதுமை மைதா (Durum Wheat Maida).
சுத்திகரிக்கப்பட்ட வகை மைதாவில், குளுட்டன் என்ற புரதம் 7.5 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட மைதா என்பது, சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்து தயாரிப்பது ஆகும். புரதம் நிறைந்த மைதா என்பது, சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் சோயா மாவு அல்லது நிலக்கடலை மாவு அல்லது இரண்டும் சேர்த்து 10 சதவீதம் வரை கலந்து தயாரிப்பது ஆகும். இதில் புரதம் 12.5 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். குளுட்டன் என்ற புரதம் 7 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
துரம் கோதுமை என்ற இன்னொரு வகை கோதுமையில் இருந்து, ‘Durum Wheat Flour’ என்ற மைதாவும் FSSAI-இல் தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் புரதச்சத்து 11 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு என்றே தனியாக, மைதா உள்ளது. அதில் ‘பென்சாயில் பெராக்ஸைடு’ என்ற ப்ளீச்சிங் ஏஜெண்ட்டை 40 mg/kg என்ற அளவு வரை பயன்படுத்த FSSAI அனுமதித்துள்ளது.
பொதுப் பயன்பாட்டிற்கான மைதாவில் ப்ளீச்சீங் வேதிப்பொருட்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. வளிமண்டலத்தில் உள்ள பிராண வாயு (Oxygen) கூட மைதாவை வெண்மையாக்க சில தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. எந்த வகை மைதாவாக இருந்தாலும், ‘அலோக்ஸான்’ சேர்க்க அனுமதியில்லை. சொல்லப்போனால், அதனை உணவுச் சேர்மமாகவே (Food Additives) FSSAI-இல் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.