போலி நாட்டுக் கோழி முட்டையை எப்படி கண்டுபிடிப்பது? அதிகாரியின் விளக்கத்தை கேளுங்க...

Nattu Koli Muttai-நாட்டுக் கோழி முட்டை போலியாக இருந்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம் அளித்துளார்.

Update: 2023-02-09 03:31 GMT

Nattu Koli Muttai

Nattu Koli Muttai-நாட்டுக் கோழி முட்டை என கூறி விற்கப்படும் முட்டையை எந்தவித கேள்வியும் கேட்காமல் வாங்கும் பலர் நம்மில் உண்டு. நாட்டுக் கோழி முட்டையில் அதிக சத்துக்கள் உள்ளன என்பதே அதற்கு காரணம் ஆகும். அதேசமயம் லெக்கான் கோழி முட்டைகளையும் அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த இரண்டு முட்டைகளிலும் எதில் சத்துக்கள் அதிகம் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு, உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை தொடர்ந்து படியுங்கள்:

மார்க்கெட்டில் நாம் வாங்கும் ப்ரவுன் கலர் முட்டை அனைத்தும் நாட்டுக்கோழி முட்டை அல்ல. வாரச்சந்தையில் வாங்கும் காஃபி கலர் முட்டை அனைத்துமே நாட்டுக்கோழி முட்டையும் அல்ல. ஆக, சிறிய வியாபாரிகளில் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை, நம்மிடையே உள்ள நாட்டுக்கோழி முட்டை மோகத்தினை முதலீடாகக் கொண்டு, முறைகேடாக பொருளீட்ட முயற்சிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஏனென்றால், சமீப காலங்களில் உணவு பாதுகாப்புத் துறை டீ டிக்காஷனால் நிறமூட்டப்பட்டு, நாட்டுக்கோழி முட்டை என்று மோசடியாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளைப் பறிமுதல் செய்து, அழித்துள்ளனர். எனவே, நாட்டுக்கோழி முட்டை, பிரவுன் முட்டை, லெக்கான் கோழி முட்டை மற்றும் அவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.

பிரவுன் முட்டை என்பது லெக்கான் கோழிகளின் ஒரு குறிப்பிட்ட இனம் இடும் முட்டைகள் தாம். பிரவுன் நிறத்திற்கு, கோழியின் ஓடு சுரப்பியில் (shell gland) சுரக்கும் ப்ரோட்டோஃபோர்பைரின் என்ற நிறமி தான் காரணமாகும். பிரவுன் மட்டுமல்ல, நீலம், நீல பச்சை நிறத்திலும் கோழி முட்டை உள்ளது. நாட்டுக்கோழியின் (அதாவது, கூண்டில் இல்லாமல், சுதந்திரமாக நடமாட அனுமதித்து வளர்க்கப்படும், இந்திய வகைக் கோழி) முட்டை, மங்கலான வெள்ளை நிறத்தில் (வெளீர் பழுப்பு என்று கூட கூறலாம்) தான் இருக்குமே தவிர, டீ டிக்காஷன் நிறத்திலோ அல்லது ப்ரவுன் நிறத்திலோ இருக்காது.

சுற்றுப்புற சூழல், உணவு போன்றவை கோழி முட்டையின் நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். லெக்கான் கோழியின் ப்ரவுன் முட்டை அல்லது வெள்ளை முட்டை, நாட்டுக்கோழியின் முட்டை ஆகியவற்றின் ஊட்டச்சத்து விகிதத்தில் குறிப்பிடும்படியான வித்தியாசம் எதுவும் கண்டறியப்படவில்லை.

முட்டைக் கோழி வருடம் அதிகபட்சம் 320 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டவை. ஆனால், நாட்டுக்கோழி வருடத்திற்கு 180 முட்டைகள் இடும் என்பதே சற்று அதிகம் தான். அதனால்தான், நாட்டுக்கோழி முட்டையின் விலை முன்னதைவிட அதிகம். எனவே, சில வியாபாரிகள் லெக்கான் கோழி முட்டையை நாட்டுக்கோழி முட்டை என்று நுகர்வோரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

நாட்டுக்கோழி முட்டை என்று கடைகளிலோ அல்லது வாரச்சந்தையிலோ அல்லது தெரு வணிகரிடமோ வாங்கி வந்தால், அந்த முட்டைகள் உண்மையாகவே நாட்டுக்கோழி முட்டைதானா என்பதை பரிசோதிக்க, அந்த முட்டைகளை பச்சைத் தண்ணீரில் கழுவிப் பார்த்தாலோ அல்லது ஈரப்பஞ்சு கொண்டு முட்டையைத் துடைத்துப் பார்த்தாலோ, டீ டிக்காஷன் அல்லது செயற்கை நிறமிகளால் முட்டை நிறமூட்டப்பட்டிருப்பின், தண்ணீர் அல்லது பஞ்சின் நிறம் சிறிது பழுப்பாக மாறி இருக்கும்.

ஆக, எந்த வகை கோழி முட்டைகளுக்கும் இடையே ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லாததினால், நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றேயொன்று, நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News