உஷார்! மக்களே உஷார்!! கவனமாக இருங்க, கடுகிலும் கலப்படம் இருக்குங்கோ…

சமையலுக்கு பயன்படுத்தும் சிறிய பொருளாக இருந்தாலும் கடுகிலும் கலப்படம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-09 07:03 GMT

சமையலில் முக்கிய பங்கு வகிக்ரும் ஒரு பொருள் கடுகு. அந்த கடுகு பற்றிய மருத்துவக் குறிப்புகள் அதர்வனவேதத்தில் கூட உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கடுகில் பல சத்துக்களும், மருத்துவக் குணங்களும் நிறைந்து உள்ளன. மேலும், கடுகிலும் கலப்படம் என ஒரு அச்சம் இருந்து வருகிறது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு இதோ:


கருங்கடுகு, வெண்கடுகு, சிறுகடுகு, மலைக்கடுகு மற்றும் காட்டுக்கடுகு என்று கடுகில் பல வகை உண்டு. கடுகுக்கு என்று தனி சுவை கிடையாது. அது தண்ணீருடனோ அல்லது சூடான எண்ணெயிலோ சேர்த்த பின்னர், அதிலிருந்து ஒரு நொதியம் வெளிப்பட்டு, ஒரு காரச்சுவையைத் தருகின்றது.

நூறு கிராம் கடுகில் எரிசக்தி: 469 Kcal (தினசரி தேவையில் 23 சதவீதம்), கார்போஹட்ரேட்: 34.9 கிராம் (தினசரி தேவையில் 12 சதவீதம்), கார்போஹைட்ரேட்டில் நார்ச்சத்து: 14.7 கிராம் (தினசரி தேவையில் 59 சதவீதம்), மொத்த கொழுப்பு: 28.8 கிராம் (தினசரி தேவையில் 44 சதவீதம்). அதில், நிறைவுற்ற கொழுப்பு 1.5 கிராம் (தினசரி தேவையில் 7 சதவீதம்). மோனோ-அன்சேச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் 19.8 கிராம் மற்றும் பாலி-அன்சேச்சுரேட்டட் அமிலம் 5.4 கிராம் உள்ளது.

கடுகில் உள்ள ஐசோ-தயோசையனேட் என்ற ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட் மார்பக, நுரையீரல், செரிமான மண்டலம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்பினைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு உடல் வலிக்கும், தசைப் பிடிப்பிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.


தலை முடி வளர்வதற்கும் கடுகு பயன்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுகு நமது உடலில் கெட்ட கொழுப்பினைக் (LDL) குறைக்கவும், நீரிழிவு நோய் பாதிப்பினை குறைக்கவும் பயன்படுகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கடுகினை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச அளவு “1-2 தேக்கரண்டி” என்பதாகும்.

கடுகில் கலப்படம்:

கடுகில் அதிகமாக நடந்து வரும் கலப்படம் பிரம்மத்தண்டு விதைகள் தாம். (Argemone Seeds). பிரம்மத்தண்டு விதைகளை நாம் சாப்பிடுவதால், ‘எப்பிடமிக் ட்ராப்ஸி’ (Epidemic Dropsy) என்று சொல்லக்கூடிய நோய் ஏற்படும். உடல் வலி, அதிகக் காய்ச்சல், கால்வீக்கம், மூச்சுத் திணறல், இதயப் படபடப்பு, கண் பார்வை குறைபாடு அதன்பின், பார்வையிழப்பு வரை செல்லக்கூடும்.

கடுகில் பிரம்மத்தண்டு விதைகளை எப்படி கண்டறிவது:

கடுகின் மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். ஆனால், பிரம்மத்தண்டு விதையின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். கடுகை உடைத்துப் பார்த்தால், உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், பிரம்மத்தண்டு விதையினை உடைத்துப் பார்த்தால், உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், தமிழகத்தில் மேலே சொன்ன கலப்படம் இல்லையென்றே சொல்லலாம் என மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News