Break fast-காலை உணவிற்கு பிரேக்பாஸ்ட் என பெயர் வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
Break fast-காலை உணவிற்கு பிரேக்பாஸ்ட் என பெயர் வந்ததற்கான காரணம் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு சத்தான உணவு அத்தியாவசியமான ஒன்றாகும். ஒரு நாளின் முக்கியமான உணவு என்றால் அது காலை உணவு தான். ஆனாலும், பலர் வேலை பளு அல்லது நேரமின்மை காரணமாக காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தப் பழக்கம் ஓர் ஆரோக்கியமான உடலுக்கு பல்வேறு வகையான தீமைகளை விளைவிக்கிறது.
காலை உணவு வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. நீண்ட நேர இரவு உறக்கத்திற்கு பிறகு ஏற்படும் சோர்வை உடனடியாக நீக்க இதுவே சிறந்த வழியாகும். மூளைக்கு அத்தியாவசிய சக்தியை அளிப்பதும் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கும் காலை உணவு இன்றியமையாதது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கி, அதன் செயல்பாடுகள் திறம்பட மேம்படுகின்றன.
காலை உணவைத் தவிர்ப்பவர்கள் மதிய உணவின்போது அதீதப் பசியால் நொறுக்குத் தீனிகளை நாடவே வாய்ப்பு அதிகம். இதனால் தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்ந்து உடல் பருமனுக்கு வித்திடும். அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதும் வழக்கமாகிவிடும். இது நாளடைவில் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
மூளை சீராக இயங்க குளுக்கோஸ் அளவு சரியாக இருக்க வேண்டியது கட்டாயம். அந்நிலையைக் காலை உணவு சீர்ப்படுத்தும். இந்த முக்கிய உணவைச் சாப்பிடாதபோது கவனக்குறைவு, திடீர் மனநிலை மாற்றங்கள், எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை அடிக்கடி நேரிடலாம். இதனால் வேலை மற்றும் படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது.
முறையான காலை உணவுப்பழக்கம் எடை நிர்வாகத்துக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்றாடம் கிடைக்கும் சக்தியின் கணிசமான அளவை இந்த உணவே வழங்குகிறது. சீரான காலை உணவைப் பின்பற்றுபவர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதால் ஆரோக்கியமான எடை இலக்கை எளிதாகப் பேணுகின்றனர்.
உணவின் வகைகள் இடத்துக்கு இடம் மாறுபடலாம் என்றாலும் பழங்கள், ஓட்ஸ், கொட்டைகள் (Nuts), முட்டை போன்ற புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறந்த காலை உணவுகள் ஆகும். இவற்றை உட்கொள்வதால் மூளை வளர்ச்சியும் மேம்படுகிறது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு, சரியான நேரத்தில் சத்தான காலை உணவைக் கொடுக்கத் தவறினால் அவர்களின் அறிவு வளர்ச்சியிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
இரவு உணவை நாம் இரவு 9 மணிக்கு எடுக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் காலை 6 மணி வரை தூங்கிவிட்டு அதன் பின்னர் நாம் சாப்பிடுவதற்கு 9 மணி என வைத்துக்கொண்டால் கூட கால இடைவெளியானது சுமார் 10மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்படி ஒரு நீண்ட இடைவெளி மதியம் மற்றும் இரவு உணவு வேளையின் போது இருப்பதில்லை. நம்மை அறியாமல் நாம் உண்ணாவிரதம் இருக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துவதால் தான் காலை உணவிற்கு ஆங்கிலத்தில் ‘பிரேக்பாஸ்ட்’ என பெயர் வைத்துள்ளனர். ஆங்கிலேயர்கள் சூட்டிய அந்த பெயரே இன்று உலக அளவில் ஒரு நடைமுறையாக உள்ளது.
மாறிவரும் இயந்திர வாழ்க்கையில் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்றால் தவிர்க்கக் கூடாததாகக் காலை உணவு அமைகிறது. அவரவர் உடல்நிலைக்கேற்ப தேவையான மாற்றங்களுடன் ஆரோக்கியமான காலை உணவை ஒருபோதும் தவிர்க்காமல், ஒரு முழுமையான வாழ்வை வாழ்வோம்.