கொழுப்பைக் கட்டுப்படுத்த சிறந்த காலை உணவுகள் என்ன தெரியுமா?

கொழுப்பைக் கட்டுப்படுத்த சிறந்த காலை உணவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

Update: 2024-02-20 02:57 GMT
பைல் படம்

சுகாதாரமான இதயத்திற்கு கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பது அவசியம். உயர் கொலஸ்ட்ரால் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்தை நிலைநிறுத்த விரும்புபவர்களும், தங்கள் காலை உணவைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான காலை உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம் மற்றும் அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும். மேலும், ஆரோக்கியமான காலை உணவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

அன்றாட நம் ஊர் உணவுகளே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பெரிதும் உதவுகின்றன. இந்தக் கட்டுரையில், நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஆரோக்கியமான காலை உணவு விருப்பங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இட்லி/தோசை

அரிசி மற்றும் உளுந்தை வைத்து செய்யப்படும் இட்லி அல்லது தோசை நம் தமிழ்நாட்டின் காலை உணவுத் தேர்வுகளில் சிறந்தது. அதிலும் முளைகட்டி செய்யும் இட்லியில்/தோசையில் தான் எண்ணற்ற நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. இட்லி மற்றும் தோசை புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் என்பதால் இதில் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. புளிக்கவைத்தல் சத்துக்களை மேம்படுத்துகிறது மற்றும் அவற்றை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. இட்லி மற்றும் தோசை மிகவும் லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகள். எனவே, வயதானவர்கள் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு அற்புதமான காலை உணவாக செயல்படுகிறது. இட்லி, தோசையுடன் சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து உண்பது சிறந்த கூட்டணியாகும். மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் சட்னி உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுகிறது. குறிப்பாக துவரம் பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் சாம்பார் உங்கள் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.

ராகி கஞ்சி

ராகி உடல் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. எலும்பை திடமாக்க தேவையான கால்சியம் நிறைந்த, எளிதில் செரிமானமாகக்கூடிய சிறந்த காலை உணவு ராகி. குறிப்பாக குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. குறைந்த கலோரிகள் கொண்ட ராகி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுவதால் நீரிழிவு உள்ளவர்களும் இதை நிச்சயம் உண்ணலாம். ராகியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளதால் , அவை இரத்த ஓட்டத்தில் இருந்து கொலஸ்ட்ரோலை அகற்ற உதவுகின்றன. எனவே, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை உறுதிப்படுத்த ராகி ஒரு அற்புதமான காலை உணவு வகையாக செயல்படுகிறது.

ஓட்ஸ்

கெட்ட கொழுப்பான எல்.டி.எல் அளவைக் குறைக்கக் கூடிய, சத்தான தானியமாகத் ஓட்ஸ் உள்ளது. பீட்டா குளுக்கன் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஓட்ஸில் நிறைவாக உள்ளதால் ஆரோக்கியமான இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகின்றன. இதை காலை உணவாக எடுத்து கொள்வதால் நாள் முழுவதும் நீங்கள் நீரேற்றமாக உணருவீர்கள். மலச்சிக்கலையும் இது உண்டாக்காது. உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும் தன்மை கொண்டிருப்பதால் உங்களால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். தயிர் , பழங்கள் மற்றும் ஓட்ஸ் சேர்த்து செய்யப்படும் ஸ்மூத்தி களும் , சத்து நிறைந்த காலை நேர பானங்களில் ஒன்றாக செயல்படுகிறது.

முட்டை

உடல் ஆரோக்கியத்திற்கு புரதங்கள் இன்றியமையாதவை. நல்ல தரமான புரத சத்தின் ஆதாரமான முட்டைகள், வலிமையான தசைகளை உருவாக்க உதவுகின்றன. மேலும் உயர்தர புரதத்தின் ஒரு பகுதியான கொலின் கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைப்பதிலும், வீக்கம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வேகவைத்த முட்டையை சாப்பிடுவது உங்களது எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை உயர்த்தாமல் இருக்க உதவுகிறது.

Tags:    

Similar News