Cutlet recipe in Tamil சுவையான வெஜிடபிள் கட்லெட்டை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
மாலை நேர சிற்றுண்டிகளின் சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை வரிசையில் இந்த கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.
வெஜிடபிள் கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.
இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. வெஜிடபிள் கட்லெட் பல வகையான காய்கறிகளை கொண்டு செய்யப்படுகிறது.
உருளை கிழங்கு, பச்சைப்பட்டாணி, காலிபிளவர், பீன்ஸ், ப்ரோக்கலி, கேரட், ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான வெஜிடபுள் கட்லட் நீங்களும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான வெஜிடபிள் கட்லெட் செய்ய சில குறிப்புகள்
- கட்லெட் செய்வதற்கு கேரட், பீட்ரூட், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றுடன் நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- காலிபிளவர், பிராக்கோலி போன்ற காய்கறிகள் பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
- பீட்ரூட் சேர்க்கும் பொழுது கட்லட் ஓரளவு இனிப்பாக இருக்கும். நீங்கள் இனிப்பு சுவையை தவிர்க்க விரும்பினால் பீட்ரூட் சேர்க்காமல் செய்யலாம்.
- காய்கறி கலவையை எடுத்து உருட்டும் போது கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒருவேளை ஒட்டினால் சிறிதளவு மைதா மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும்.
- கட்லெட்டை எண்ணெயில் பொரிக்கலாம் அல்லது தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வைத்து எடுக்கலாம்.
- நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் மைதா கலவைக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தலாம்.
- வீட்டில் இருக்கும் பிரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 5
பச்சை பட்டாணி – 1/4 கப்
துருவிய பீட்ரூட் – 1
துருவிய கேரட் – 2
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மைதா – 4 தேக்கரண்டி / தேவையான அளவு
பிரெட் கிரம் – தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
3. வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் .
4. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் பொடி பொடியாக நறுக்கிய பீன்சை சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் கால் கப் பச்சை பட்டாணி, ஒரு துருவிய கேரட் மற்றும் ஒரு துருவிய பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
5. பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள 2 உருளைக்கிழங்குகளை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
6. நன்கு கலந்த பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
7. ஒரு கப்பில் நான்கு தேக்கரண்டி மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
8. காய்கறி கலவையை எடுத்து விருப்பப்பட்ட அளவில் உருட்டி தட்டிக் கொள்ளவும்.
9. அதனை மைதா கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் கலவையில் பிரட்டி எடுக்கவும்.
10. மீண்டும் ஒருமுறை மைதாவில் முக்கி பிரெட்டில் பிரட்டி எடுக்கவும்.
11. மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
12. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி போடவும்.
13. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
இப்போது சுவையான, சூடான கட்லெட் தயார். இதனுடன் சாஸ் சேர்த்து சாப்பிட சுவை மேலும் கூடும்