சாதி,மத, பேதமற்ற பண்டிகையான பொங்கல் திருநாள்....தமிழர் பெருநாள்...

About Pongal Festival in Tamil-ஆண்டுதோறும் தை மாத பிறப்பன்று பொங்கல் பண்டிகையானது விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.;

Update: 2022-10-16 11:16 GMT

About Pongal Festival in Tamil


வீடுகளின் முன் பொங்கல் தினத்தன்று கோலமிட்டு சூர்யபகவானுக்கு பொங்கலிட்டு படைப்பர். (பைல்படம்)

About Pongal Festival in Tamil-தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் தை மாதம் பிறக்கப்போகுது என்றாலே கொண்டாட்டந்தான். காரணம் ஊர்கூடி கொண்டாடப்போகும் பண்டிகையாக இது பல ஊர்களில் திகழ்வதுதான் ஹைலைட்டான விஷயமே. பொங்கல் பண்டிகை என்றாலே 4 நாட்கள் தொடர்ந்து வரும் பண்டிகை என்பதால் கிராமங்களில் இருந்து வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி படையெடுத்த அத்தனை நல் உள்ளங்களுமே தன் சொந்த ஊரில் டென்ட் அடிக்ககூடிய வாய்ப்பாக பொங்கல் பண்டிகையானது ஏற்படுத்தி தருகிறது ஆண்டுதோறும்.

ஏன் தீபாவளிக்கு வரமாட்டார்களா? என கேட்காதீர்கள் . காரணம் தீபாவளி என்பது ஒரு நாள் கூத்துதான். உடனடியாக ஓட வேண்டும். இது அப்படிஇல்லை. அரசே 4நாட்கள் தொடர்ந்து விடுப்பு நாளாக அறிவித்துள்ளது. ஆகையால் எல்லோருக்கும் விடுப்பு கிடைக்கும் பண்டிகையாக இருப்பதால் அத்தனையையும் நகரத்திலேயே விட்டுவிட்டு ஒரு நான்குநாட்கள் நட்புகள், உற்றார் உறவினருடன் இருப்பதற்காக தன் சொந்த கிராமத்தினைநோக்கி படையெடுப்போர் பலர்.

பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம்.

1. பொங்கல் பண்டிகையை உழவர்களின் திருநாள் என்றும் அழைக்கலாம். காரணம் நாம் இன்று திருப்தியாக வயிராற உண்கிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் விவசாயிகளே. அவர்கள்இல்லாமல் எந்த நாட்டின்பொருளாதாரமும் இல்லை. தன்னுடைய உற்றார்,உறவுகளுடன் மிகச் சிறப்பாக 4 நாட்கள் தங்கியிருந்து கொண்டாடப்படும் தமிழர் திருநாள்தான்பொங்கல்விழா ஆகும்.

2.விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தில் விளைந்த புதுநெல்லை கைக்குத்தல் எடுத்த பச்சரிசியை புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். தோரணம் கட்டி தோட்டத்தில் விளைந்த மஞ்சள், இஞ்சி, கரும்பு, உள்ளிட்ட விளைநில பயிர்களுடன் சிறப்பு பூஜையை சூர்ய பகவானுக்கும் இயற்கைக்கும் செய்து வணங்கி வழிபடுவார்கள்.தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையானது அனைவரின் ஆழ்மனதில் பதிந்த சொற்றொடராகும். ஆகவே தை பிறந்தால் மார்கழி மாதத்தில் நடக்காத திருமணங்கள் நடந்தேறும். அதற்கு தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என நம் முன்னோர்கள்சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

3.போகிப்பண்டிகை

தமிழகத்தினைப்பொறுத்தவரை பொங்கல் பண்டிகையானது தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல்நாள் போகிப்பண்டிகையாகும். இந்த போகியின் போது தனக்கு தேவையில்லாத பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்தி வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் வைபவமும் இந்த நாட்களில்தான் நடக்கும். அதாவது,பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற வார்த்தைக்கேற்ப பழைய தேவையில்லாதவற்றினை சுத்தம் செய்து வாங்கிய புது பொருட்களை உள்ளே வைப்பர்.

4.தைத்திருநாள்விழா :

தை பிறந்தால்வழி பிறக்கும்என்பார்கள். அந்த வகையில் தைமாதமானது தமிழ் மாதத்தில் சிறப்பு வாய்ந்த மாதமாக தமிழர்களால் கருதப்படுகிறது. இத்திருநாளை அறுவடை திருநாள் என்றும் அழைப்பர்.

இப்பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகையானது தனிச்சிறப்பு பெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் படையிலிட்டு இயற்கை கடவுளாகிய சூரியனை வணங்குதல் என்பது நமக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தினையும் அள்ளித்தரும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

இந்நாளை உழவர் திருநாள் என்றும்அழைப்பர். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்திஎடுத்த புத்தரிசியை புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில்விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளோடு கரும்புடன் நைவேத்தியம் செய்து நன்றி தெரிவிக்கும் நன்னாளாக பொங்கல்திருவிழா கருதப்படுகிறது.மஞ்சள் கொத்தினை புதுப்பானை கழுத்திலிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து பொங்க வைப்பார்கள். அரிசி, வெல்லம், தண்ணீர், பால் இவையனைத்தும் கலந்து தயாரிக்கப்படும் பொங்கலானது பொங்கி வழியும் நேரத்தில் '' பொங்கலோ பொங்கல்'' என அனைவரும் கூடி மகிழ்வர். இதனை பிரசாதமாக அனைவருக்கும்அளிப்பர் விருந்தோடு.

5. மாட்டுப்பொங்கல்

உழவர்களின் வாழ்வில் தினந்தோறும் ஒன்றுடன் கலந்து உள்ளது கால்நடைகள். கிராமப்புறங்களில் இப்பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே மாடுகள் கட்டப்படும் கொட்டகை, அல்லது தொழுவம் சுத்தம் செய்யப்படும். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்குவண்ணம் பூசி, உழவு கருவிகள் அனைத்தையும்  படையல் வைத்து வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் வாயில்லா ஜூவன்களுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கப்படுகிறது.

6.காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பிரிந்த நட்புகள், உறவுகளைச் சந்திக்கும் நாளாக கருதப்படுகிறது. பெண்கள் தங்களுடைய உடன்பிறந்த சகோதரர்களுக்காக இறைவனிடம் படைப்பது காணும் பொங்கல் என்று கருதப்படுகிறது. இதனை கன்னிப்பொங்கல், காணும் பொங்கல், அல்லது கணுப்பொங்கல் எனவும் அழைப்பர்.சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றைய தினம் உறவுகள் அனைத்தும் மெரினா கடற்கரையில் கூடி கழித்து பின் பிரிவர். இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் அனைவரும் சந்திக்க ஒரு இடத்தினை தேர்வு செய்திருப்பர்.

7.கலர் கலராய் கோலம்

தமிழகத்தினைப்பொறுத்தவரை பொங்கல் என்று வந்துவிட்டாலே பெண்களுக்கு குஷியோ குஷிதான். காரணம் என்ன தெரியுமா? போகியில் ஆரம்பித்துதொடர்ந்து 4 நாட்களும் விதவிதமான டிசைன்களில் கோலமாக போட்டு தள்ளுவர். இதனால் இரவு 9 மணி ஆகி விட்டால் போதும் தெருக்களில் பெண்கள் கோலம் போட துவங்கிவிடுவர். ஒவ்வொரு வீடாக சென்று யார்?- யார்-- என்னென்ன கோலம் போடுகிறார்கள் என ஒருகுழு செக் செய்துவரும். மேலும் ஒரு சில இடங்களில் கோலப்போட்டிகளும் நடத்தப்படுவதுண்டு. ஏங்க...சாதாரண நாட்களுக்கும் பொங்கல் கோலத்திற்கும் என்னங்க வித்தியாசம்னு கேட்பவர்களுக்கு இதோ...ஒண்ணுமில்லைங்க.,.. சாதாரண நாட்களில் சாதாரணமாக செம்மண் இட்டு கோலம்போடுவார்கள். பொங்கலின் போது அனைத்து கோலமும் கலர் கலராய் காட்சிதரும்...

8.விளையாட்டு போட்டிகள்

வெளியூரில் வேலை நிமித்தமாக இருப்போர் வரும் ஒரே பண்டிகை பொங்கல்தான். காரணம் தொடர்ந்த 4 நாட்கள் விடுமுறை ஒன்றாக வருவதால் வருவதற்கு ஒரு நாள் போவதற்கு ஒரு நாள் என போனாலும் முழுசா இரண்டு நாள் இங்கு இருக்கலாம். இதனால் அனைத்து நட்புகளும் சந்தித்து பார்ட்டியெல்லாம் கூட நடக்குமுங்க. ஒவ்வொரு ஊரிலும் வழுக்கு மரம்ஏறுதல், சாக்குப்பை ஓட்டம், மியூசிக் சேர், ஓட்டப்பந்தயம்,வாலிபால் போட்டி, கிரிக்கெட் என ஊரே களைகட்டும் என்றால் பாருங்களேன்.

கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக  ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் (பைல் படம்)

9.ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் விடுமுறைகளில்தான் நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லுாரில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் ஆண்டுதோறும் நடக்கும். இதற்காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரு சில நாட்கள் முன்னதாகவே வந்து அனைத்து ஏற்பாடுகளையும் படம் பிடித்து செல்வர். மேலும் இதேபோல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டானது நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமானது மேற்கொள்கிறது.

10.கலாச்சாரமும், பாரம்பரியமும்...

தமிழகத்தின் கலாச்சார பண்டிகையாக பொங்கல் பண்டிகை கருதப்படுகிறது.நாம் ஆண்டு முழுவதும் உண்ணக்கூடிய அரிசியினை அதாவது நெல்லினை அறுவடை செய்ததற்கு ஆதாரமான அறுவடைத்திருவிழா தான்பொங்கல் பண்டிகை. அதாவது ஆடியில்விதைத்த விதையானது பயிராகி பின்னர் அதனை மார்கழியில் அறுவடை செய்து... அந்த அறுவடைக்காக கொண்டாடப்படும் தமிழர்களின் திருவிழாதான் பொங்கல் திருவிழா. அதேபோல் மார்கழி மாதம் என்பதால் ஒருசிலர் இதனை தெய்வீகமாதம்என்பர். ஆனால் ஒரு சிலரோ சூன்ய மாதம் என்று சொல்லி திருமண ஏற்பாடுகளை நிறுத்தி வைத்துவிடுவர். பின்னர் தைமாதந்தான்அந்த பேச்சினை துவங்குவர். இதனால்தானோ தைபிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அந்த வகையில் அக்காலத்தில் முன்னோர்கள் சொல்லிவிட்டுசென்ற பாரம்பரியத்தினை இன்றளவில் தொடர்ந்து நாம் கொண்டாடி வருவது தமிழினத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமையாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News