தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? ஓரிரு நாளில் வெளியாகிறது அறிவிப்பு
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, முதல்வர் ஓரிரு நாளில் முடிவெடுப்பார் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மைய தொடக்க விழா, இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மையத்தையும், சிறப்பு 'டேட்டா செல்' என்ற செயலியும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது: திறக்கப்பட்டுள்ள புதிய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தின் மூலம், தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை, 10 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.
தற்போது தமிழகத்தில் 97 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். ஒமிக்ரான் பரவலை தடுக்க, தமிழகத்தில் டிச. 31 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு விதிப்பது தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர், இரவு நேர ஊரடங்கு குறித்த முடிவை, முதல்வர் இறுதி செய்வார் என்றார்.