தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா - தெருவுக்கு சீல் வைப்பு

Update: 2021-04-12 16:26 GMT

எட்டயபுரம் அரசு மகளிர் பள்ளி ஆசிரியை கடந்த வாரம் தேர்தல் பணிக்கு சென்ற போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் முடிவில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவரது சகோதரி, தந்தை உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அறிவுறுத்தலின் படி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகனின் வழிகாட்டுதலுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் வசித்து வரும் பெருமாள் கோவில் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தெருவில் தடுப்புகள் அமைத்து தெரு முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதே போல் எட்டயபுரம் நடுவிற்பட்டி அய்யம் பெருமாள் முதலியார் தெருவிலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியைகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தகவல் எட்டயபுரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News