தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்

தமிழகத்தில், கொரோனா 3-வது அலை வராது என்று கூற இயலாது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-10-23 04:30 GMT

ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று, 6ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முகாம் குறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று, 6ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 1.40 கோடி முதியவர்களில், இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவர்களில், 2-வது தவணை தடுப்பூசியை, 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா பரவலில், இறப்பு விகிதம் அதிகமுள்ளவர்களாக முதியோர் உள்ள நிலையில், அவர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

இதுவரை தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு கொரோனா 3-வது அலை வராது என்று கூறிவிட முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில், தற்போது கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News