தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் - தனி வழியை தேடிய ஆந்திர வாலிபர்.
எதிர்த்து போராடும் குணம் தனக்குள் தைரியம் வளர்த்துக்கொண்டால் எப்பேர்பட்ட நோயையும் விரட்டி விடலாம்.
தெலங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் மரத்தின் மீது தங்கியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஒரு அறை மட்டுமே உள்ள வீடுகளில் வசிப்பவர்களை கொரோனா மையங்களில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தக்கூடிய வசதி இருப்பவர்களை வீடுகளிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத சூழலிலும் பலர் உள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த வாலிபர் சிவா வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத காரணத்தால் மரத்தின் மீது கட்டிலை கட்டி தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா ( வயது 25). அந்த கிராமத்தில் ஒரு அறை கொண்ட சிறிய வீட்டில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிவாவை சேர்த்து மொத்தம் 4 பேர் அந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற முடிவு செய்தார். ஒரு அறை கொண்ட வீட்டில் எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது. வீட்டில் உள்ளவர்களுக்கு தன்னால் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது.
இதற்கு ஒரு மாற்று வழியை யோசித்த சிவா. தன் வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தில் தங்கி தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதனையடுத்து அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டிய சிவா அதில் தங்கத் தொடங்கிவிட்டார்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
பலரும் சிவாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். இருப்பினும் சிவா அதனை மறுத்து தனக்கு மரத்தில் தனிமைப்படுத்தி கொண்டதில் எந்தவித பயமும் இல்லை. கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்த்து போராடும் குணமும் தனக்குள் தைரியமும் வளர்த்துக்கொண்டால் எப்பேர்பட்ட நோயையும் விரட்டி விடலாம் என சிவா தெரிவித்துள்ளார்.