இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?

தங்கத்தின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஒரே மாதிரி தான் உள்ளது.;

Update: 2024-05-08 05:22 GMT

தங்க ஆபரணங்கள் (கோப்பு படம்)

கல்யாணம், காதுகுத்து, கோயில் திருவிழா... என நம் வீடுகளில் எந்தவொரு விசேஷமாக இருந்தாலும் சரி, தங்கம் இல்லாமல் அது முழுமையடைவதே இல்லை. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தால் போதும், பலருக்கும் உடனே தங்கம் வாங்கலாமா என்று தான் யோசிக்கத் தோன்றும். ஆனால், சமீப நாட்களாக  தங்க விலையேற்றம் பயமுறுத்துகிறது. தங்கம் வாங்கும் கனவில் உள்ள நடுத்தர குடும்பத்து மக்களை, ‘போதும்... இதோட நிறுத்திக்குவோம்...’ என நினைக்க வைத்திருக்கிறது.

‘இதோ இப்போ ரூ.50,000-த்தை தொட்ரும்’ என்றிருந்த தங்கம் விலை, கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி பவுனுக்கு ரூ.50,000-த்தை தொட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே, அடுத்த நாளே அதாவது மார்ச் 29-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120-க்கு விற்பனை ஆனது. இத்துடனாவது நின்றுவிடுமா என்று பார்த்துக் கொண்டிருந்தபோதே தங்கம் விலை பவுனுக்கு ரூ.55,000 வரை சென்றது.

`அமெரிக்காவில் பணவீக்கம், உலக நாடுகளுக்கிடையே நடக்கும் போர்கள், உலக நாடுகளில் நடக்க உள்ள தேர்தல்கள், உலக நாடுகள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற வற்றால் தங்கம் விலை ஏறிக் கொண்டே போகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000 வரை கூட செல்லலாம்' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. பவுனுக்கு ரூ.55,000 விற்றதிலிருந்து ரூ.53,000 வரை குறைந்திருக்கிறது. அடுத்தடுத்து முகூர்த்த நாள்களும், அட்சய திருதியையும் வரவிருக்கும் பட்சத்தில், தங்கம் விலை குறையுமா... இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை யைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்...

“இப்போதைய சூழல்ல தங்கம் விலை மேலே போகுமா... கீழே இறங்குமா?ன்னு சொல்ல முடியாது. அதனால ‘இன்னும் தங்கம் விலை கூடுறதுக்குள்ள வாங்கி வெச்சுடலாம்’ என்று தங்கம் வாங்கி குவிப்பதைத் தவிர்க்கலாம். தங்கம் விலை குறைவதற்கு இன்னும் சில நாள்கள் காத்திருக்கலாம்.

இப்போதே தங்கம் வேண்டும் என்றால் தேவையான அளவு மட்டும் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களிடம் இருக்கும் பணத்தை வேறு விஷயங்களில் முதலீடு செய்யலாம். அப்படி முதலீடு செய்வதிலும் கவனம் தேவை.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி மற்றும் கோல்டு இ.டி.எஃப் நல்ல ஆப்ஷன்களாக இருக்கும். இவ்வளவு தொகை, இந்தத் தேதி என மாதா மாதம் முதலீடு செய்துவருவது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. இந்தத் தொகையை மாதாமாதம் சரியாகக் கட்டி வரும்போது சில ஆண்டுகளில் நாம் கட்டிய தொகை, அதற்கான வட்டி என நமக்குத் தேவையான பணம் கையில் கிடைத்ததும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கோல்டு இ.டி.எஃப் என்பது மாதாமாதம் நம்மிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வது. மாதாமாதம் நம் செலவு போக மிச்சமாகும் தொகையில்கூட, கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை வாங்கலாம். தற்போது கோல்டு இ.டி.எஃப் ஒரு யூனிட் ரூ.60-க்கு விற்பனையாகிறது. ஒரு மாதம் ரூ.1,000 மிச்சமாகிறது...இன்னொரு மாதம் ரூ.1,500 மிச்சமாகிறது என்றால், அந்தத் தொகையைப் பொறுத்து யூனிட்டுகளை வாங்கலாம். தேவைப்படும்போது விற்று, பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலீடு விஷயத்தில் அவசரமாக முடிவெடுக்காமல், ஸ்மார்ட்டாக முடிவு எடுங்கள் மக்களே” என்கிறார் சுந்தரி ஜகதீசன்.

தகவல் உதவிக்கு நன்றி: விகடன்

Tags:    

Similar News