சவூதி பெண்களுக்கு வேலைவாய்ப்பு : இந்திய வணிகம் பெருகும்..! எப்படி?

"சவூதி அரேபியப் பெண்கள், அவர்கள் விரும்பும் வண்ண உடைகளை அணிந்து கொள்ளலாம்" என சவூதி ஆட்சியாளரான இளவரசர் சல்மான் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-04 07:01 GMT

சவூதி அரேபிய பெண்கள் (கோப்பு படம்)

சவூதி அரேபியாவிற்கு வேறு வழியில்லை. பெட்ரோலிய ரிசர்வ் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கும் மேலாக இந்தியா போன்ற நாடுகளில் இனிவரும் காலங்களில் பெட்ரோலின் தேவை மிகவும் குறைந்து விடும். அதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வருடத்திலிருந்து இந்தியாவில் வாகனங்களுக்குத் தேவையான பெட்ரோலுடன் கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் 20 சதவீதம் கலக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் ஏகப்பட்ட அன்னியச் செலாவணி மிச்சமாகும். அதற்கும் மேலாக டீசல் மூலம் இயங்கிக் கொண்டிருந்த இந்திய ரயில் இஞ்சின்கள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன. பெரும்பாலான ரயில்கள் மின்சாரத்தால் ஓடிக் கொண்டிருக்கின்றன. டீசலின் தேவை குறைந்து விட்டதால் அதிலும் ஏகப்பட்ட அன்னியச் செலாவணி மிச்சமாகும்.

சூரிய ஒளியிலிருந்து எடுக்கப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இன்னும் சிலவருடங்களில் பல புதிய அணுமின் நிலையங்கள் இயங்கவிருக்கின்றன. பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனைக் கொண்டு இயக்கப்படும் கார்கள் வரவிருக்கின்றன. இப்படிப் பலவகைகளிலும் இந்தியாவின் எண்ணெய்த் தேவை குறைந்துகொண்டே வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா முற்றிலுமாக பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தி விட்டாலும் ஆச்சர்யப்படுவதில் ஒன்றும் இல்லை.

சவூதியிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் உலகின் இரண்டாவது பெரும் நாடான இந்தியா பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால் சவூதியின் கதி என்னவாகும் என விளக்கத் தேவையில்லை. எனவே சவூதி தனது பொருளாதாரத்தை வேறு வழிகளில் மேம்படுத்த திட்டமிட்டு அதன்படி நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து எமிரேட்ஸ், சவூதி அரேபியா வழியாக ஐரோப்பாவிற்குச் செல்லும் சரக்கு ரயில்பாதை அதில் மிக முக்கியமானது. இன்னும் பலவகைகளில் சவூதி இந்தியாவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதில் முக்கியமானது பெண்களின் சுதந்திரம். கல்விகற்ற சவூதிப் பெண்கள் வேலைக்கு வந்தால் அந்த நாடு வெளிநாட்டவரைச் சார்ந்து நிற்கத் தேவையில்லை என்பது முக்கிய காரணம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை சவூதி எடுத்துள்ளது. அதாவது சவூதி அரேபிய நாட்டில் இனி பெண்கள் அரசு மற்றும் இதர பணிகளுக்கு செல்லலாம். இதனால் வெளிநாட்டவர்கள் இதுவரை செய்த பணிகளை சவூதி பெண்கள் செய்யலாம் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

இது மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம். இன்னும் ஏராளமான ஆச்சரியங்கள் நமக்குக் காத்திருக்கின்றன. எமிரேட்டில் கட்டப்பட்ட ஹிந்து ஆலயத்தைப் போன்றதொரு ஆலயம் சவூதி அரேபியாவிலும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே பஹ்ரெயின் ஒரு ஹிந்து ஆலயத்தைக் கட்ட ஆர்வம் காட்டியிருக்கிறது.

இனிவரும் காலம் இந்தியாவின் காலம். இந்தியப் பொருளாதாரம் வலிமையடைந்து கொண்டிருப்பதால் சாதாரண இந்தியர்கள் பணக்காரர்களாக ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. தங்கள் நாட்டில் கோயில்கள் கட்டினால் ஏகப்பட்ட இந்தியர்கள் சுற்றுலா வருவார்கள் என்பதால் "இஸ்லாமிய" அரேபிய நாடுகள் ஹிந்துக் கோவில்கள் கட்டுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கின்றன. காலம் கண்முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.

சவூதிப் பெண்கள் வண்ண உடைகள் அணிய ஆரம்பித்தால் அந்த உடைகளில் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. திருப்பூர் காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம் தான். 

Tags:    

Similar News