முழு ஊரடங்கு வேண்டாம்: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கோரிக்கை
முழு ஊரடங்கு வேண்டாம் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ஃபிக்கி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பகுதி ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்நிலையில் ஃபிக்கி அமைப்பின் தலைவர் உதய் சங்கர் தமிழகம், மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு, கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பில் இருந்து, தற்போது நாடு மீண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சீர் குலைத்துவிடும்.
எனவே, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.