தினமும் 50 டன் மலர்கள் : இந்தியாவிடம் கேட்கிறது ரஷ்யா..!

இந்தியாவில் இருந்து தினமும் 50 டன் மலர்கள் இறக்குமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.;

Update: 2024-01-17 16:40 GMT

மலர்கள் (கோப்பு படம்)

தமிழக, கர்நாடக எல்லை நகரான, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில், 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா ரகங்களான தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற வகைகளை, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இது தவிர, ஜெர்புரா ரகங்களான ஸ்டேன்சா, பேலன்ஸ், எஸ்மாரா, கோலியாத், கோல்ட் ஸ்டிரைக் வகைகளும், கார்னேசன் ரகங்களான டர்போ, மாஸ்டர், எரக்டஸ், கூல், டோணா, பிக்மாமா, மஞ்சள் டோணா, லிபர்டி வகைகளும், செவ்வந்தி, ஆர்கிட், ஆந்துாரியம், கிரசாந்திமம் போன்ற பல்வேறு ரக மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ரோஜா சாகுபடி: இதில், அதிகளவில் ரோஜா ரகங்கள் சாகுபடியைத் தான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில், வெளிநாடுகளுக்கு அதிகளவில் ரோஜா ஏற்றுமதி செய்யப்படும். தவிர, உள்மாநிலங்களுக்கும் மலர்கள் அதிகளவில் அனுப்பி வைக்கப்படும்.

காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், டிச., 8 முதல், 20 வரை ரோஜா செடிகளில் கவாத்து பணி, உரமிடுவது போன்ற பணிகளை, 30 முதல், 40 சதவீத விவசாயிகள் மட்டுமே மேற்கொண்டுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உள்ளூர் சந்தை விற்பனையில் கவனம் செலுத்துவதால், காதலர் தின ரோஜா சாகுபடிக்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவிலான மலர்கள் தான், சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலை உருவாகியுள்ளது.

உலகத்தரம் குறைவு: ஓசூர் விவசாயிகள் சாகுபடி செய்யும் ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேசன் போன்ற மலர்கள், உலக தரத்தில் இல்லை. அதனால், அவற்றை வாங்க பல நாடுகள் முன்வராமல் உள்ளன. ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளியில் செயல்படும் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்லும் மலர்கள் கூட, உலக தரத்தில் இல்லாததால், அவற்றை வாங்க உள்ளூர் வணிகர்கள் கூட முன்வராமல் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தினமும், 50 டன் மலர்களை, ரஷ்யா இறக்குமதி செய்ய முனைப்புடன் உள்ளது. ஆனால், உலக தரம் வாய்ந்த மலர்கள், ஓசூரில் சாகுபடி செய்யப்படுவது குறைவு என்பதால் தினமும், 50 டன் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால் கூட, ஓசூரின் பங்கு, அதில் சொற்ப அளவிற்கு கூட இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சவாலான விஷயம்:

து குறித்து, அபிடா நிர்வாக உறுப்பினர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: இந்தியாவும், ரஷ்யாவும் உள்ளூர் கரன்சியில் (ரூபாய் மற்றும் ரூபிள்) வர்த்தகம் செய்ய முடிவு செய்திருந்தன. அதன்படி, இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணைக்கு வழங்க வேண்டிய பணம் கொடுக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளது. அந்த பணத்திற்கு, இந்தியாவிடமிருந்து மலர்கள் போன்ற பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய, ரஷ்யா விரும்புகிறது. அதில் ஒரு பகுதியாக தான் தினமும், 50 டன் மலர்களை இறக்குமதி செய்ய ரஷ்யா விரும்புகிறது.

ஆனால், ஓசூரில், உலகத் தரம் வாய்ந்த மலர்கள் சாகுபடி செய்வது சவாலான விஷயமாக உள்ளது. அதனால், தான், ஆப்பிரிக்க நாடுகளான எத்தோப்பியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து, அதிகளவு மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ரோஜா மலர்களை சாகுபடி செய்ய, 15 முதல், 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். காற்றில், 60 சதவீதம் வரை ஈரப்பதம் தேவை. காலநிலை மாறி, மாறி வருவதால், தரமான மலர்களை சாகுபடிக்கு தேவையான சீதோஷ்ண நிலை கிடைக்கவில்லை. இதனால் தரமான மலர்கள் உற்பத்தி செய்வதில் சிரமம் உள்ளது.

ஆனால், ஆப்ரிக்க நாடுகளில் சீரான தட்பவெட்ப நிலை, சுத்தமான நீர், வளமான மண், தினமும், 12 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ளதால், அங்கு தரமான மலர்கள் சாகுபடியாகிறது. ரஷ்யா கேட்கும் அளவிற்கு தரமான மலர்களை சாகுபடி செய்ய, ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையத்தின் மூலம், விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தரமான பூக்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

ரஷ்யாவிற்கு மலர்களை ஏற்றுமதி செய்ய, விமான கட்டணத்தில், 50 சதவீதத்தை குறைக்க, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிடா- முயற்சி செய்து வருகிறது. எனவே, தமிழக அரசு, மலர் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கட்டமைப்புக்கு தேவையான வசதிகளை செய்ய உடனடியாக முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால், ரஷ்யாவிற்கு ஏற்றுமதியாகும் மலர்களில், ஓசூரின் பங்கு பெருமளவில் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags:    

Similar News