சர்வதேச அளவில் கொரோனா பரவலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வந்து விடும் என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முழு லாக்டவுன் இதுவரை அறிவிக்கப்பட வில்லை என்றாலும், பகுதி, பகுதியாக லாக்டவுன் விதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முழு லாக்டவுன் அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே போல கொரோனா பாதிப்பு வந்த போது, முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்ததுடன், உணவுக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதனால் பிழைப்புக்காக வேறு மாநிலத்திற்கும், நகரத்திற்கும் சென்றிருந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
வழியில் பல இன்னல்கள் காரணமாக உயிரை விட்டவர்களும் உள்ளனர். மேலும் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கூட வழியில்லாமல் பலர் தவித்தனர். தற்போது மீண்டும் அது போன்று முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். இதனால், ஷாப்பிங் மால், மளிகை கடைகள், ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களுக்குத் திடீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
பொதுவாக மும்பை, சென்னை, பெங்களுர் ஆகிய பெரு நகரங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் ஒரு நாள் அதிகப்படியாக 2 நாட்களில் டெலிவரி செய்யப்படும். ஆனால், தற்போது 3 முதல் 4 நாட்கள் வரையில் டெலிவரி காலம் தேவைப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அத்தியாவசிய தேவையான பொருட்களுக்கு மட்டுமே டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது மக்கள் பிஸ்கட், சாக்லேட், பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர். பல நகரங்களில் ஈகாமர்ஸ் தளத்தில் இதற்கு ஸ்டாக் இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. 2020 மார்ச் லாக்டவுன் விதிக்கப்பட்ட போதும் இதேபோன்ற நிலை தான் உருவானது.
ஒருபக்கம் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், மறுமுனையில் டெலிவரி செய்வதில் அதிகப்படியான நெருக்கடி நிலவும் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.