மீண்டும் கொரோனா அதிகரிப்பு : பணம் அனுப்புவது குறைந்தது
கொரோனா மீண்டும் பரவி வருவதால் நகரங்களில் இருந்து பணம் அனுப்புவது குறைந்துள்ளது.
நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பணம் அனுப்புவது குறைந்து போனது.
கடந்த இரண்டு வாரங்களாக, நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பணம் அனுப்புவது, 10 சதவீதம் அளவுக்கு குறைந்து போய்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை, டில்லி போன்ற மாநில தலை நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது குறைந்து வருகிறது. நகர பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டு வரும் பணம், 10 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச்சில் வெளிமாநிலங்களிலிருந்து பெரிய நகரங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பலர், நகரங்களை விட்டு வெளியேற துவங்கிவிட்டனர். கடந்த ஆண்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த கஷ்டங்கள் இன்னும் மனதில் இருப்பதால் தற்போது பரவல் அதிகரிக்க துவங்கிய நிலையிலேயே வெளி மாநிலத்தோர் அவர்கள் தங்கியிருக்கும் நகரங்களை விட்டு வெளியேற துவங்கி இருக்கிறார்கள்.
இருப்பினும் கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருப்பதையும் காணமுடிகிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு அப்படி ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள், துறை சார்ந்தவர்கள்.
மேலும், அரசு முழு அடைப்பு குறித்த உத்தரவுகளை பிறப்பிக்காமல், தொற்று அதிகரித்திருக்கும் பகுதிகளில் மட்டும் கொரோனா நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால், தற்போது அதிக பணியாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.