ரூ.81 லட்சம் கோடி மதிப்பிற்கு யுபிஐ பரிவர்த்தனை செய்து இந்தியா சாதனை

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, நான்கு மாதத்தில் ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

Update: 2024-09-02 04:30 GMT

இந்தியர்களின் அன்றாட வாழ்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் தான் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை நடந்துள்ளது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திலிப் அஸ்பே தெரிவித்தார். ஒவ்வொரு வினாடியிலும் 3,729.1 யு. பி. ஐ., பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருக்கிறது. 40 சதவீதத்திற்கும் அதிகமான பணம் டிஜிட்டல் முறையில் தான் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,200 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடந்தன.

கடந்த 2017- 2018ம் நிதியாண்டில் 92 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்த நிலையில், ஆண்டு தோறும் இது பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் பணப்பரிமாற்றத்தில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகின்றன.

Tags:    

Similar News