கரும்பு விற்பனை செய்ய முடியவில்லை: அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
தென்னமநல்லூரில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட, கூட்டுறவு சங்க அதிகாரிகள் குறைந்த விலைக்கு கரும்பு எடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.;
மதுரை திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள தென்னம்மநல்லூர் கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில், இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக, தமிழக அரசு சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு என தனியாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம், இடைதரகர்கள் இல்லாமல் தமிழக அரசே கரும்பு விவசாயிகளிடம் நேரடியாக சென்று கரும்பு கட்டுகளை கொள்முதல் செய்ய வேண்டுமென கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், அரசின் உத்தரவை மீறி இப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அதிகாரிகள் அரசு நிர்ணயம் செய்த ஒரு கரும்பின் விலை 33 ரூபாயை விட 13-ரூபாய்க்கு எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பிட்ட விவசாயிகளிடம் மட்டுமே அரசு அதிகாரிகள் நேரடி கொள்முதல் செய்துள்ளதாகவும், இப்படி செய்வதால் மற்ற விவசாயிகள், நாங்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை நம்பி கடந்த 10 மாதங்களாக ஏக்கருக்கு, சுமார் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை செலவு செய்து இருப்பதாகவும்., ஏக்கருக்கு 24,000 கரும்பு விளைவித்து ஒரு கரும்பை ரூபாய் 13-க்கு கொள்முதல் செய்வது நியாயமற்றது என்றும், முறையான அரசு நிர்ணயம் செய்த 33-ரூபாய் விலை கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு வியாபார நோக்கத்துடன் இடைத்தரகராக செயல்படும் கூட்டுறவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் இந்த நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் தனியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள், தற்போது வாங்க தயக்கம் காட்டுவதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.