உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோய்.. கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோய்.. கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…
X
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உளுந்து பயிரிடும் மாவட்டங்களில் முக்கியமானதாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்கிறது. இந்த நிலையில், தற்போது உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் விவசாயிகள் நஞ்சை தரிசு உளுந்து பயிரிட்டு உள்ளனர். இந்தப் பயிரானது தற்பொழுது நன்கு வளர்ந்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.

தூத்துக்குடி வட்டாரத்தில் சில பகுதிகளில் உள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்த நோய் தாக்குதல் அதிகரித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் பரவுகிறது.

இந்நோய் தாக்குதலால் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, புதிதாக தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுக்கள் தென்படும். நோய் தாக்கப்பட்ட பயிர்கள், குட்டை வளர்ச்சியுடன் காலந்தாழ்த்தி முதிர்ச்சி அடைதல், மிகக் குறைந்த அளவு பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்தல் ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக காணப்படுகின்றன.

இந்த நோயில் இருந்து உளுந்து பயிரினை காப்பாற்ற விவசாயிகள் நோய் பாதித்த வயலில் இருந்து பெறப்படும் விதைகளை மறுவிதைப்பிற்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி கூடிய வம்பன் 8 ரகங்கத்தை பயிரிடுதல் வேண்டும். வரப்போர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தை பயிரிட வேண்டும்.

உளுந்து மஞ்சள்சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைதல் வேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஒரு ஹெக்டருக்கு 12 எண்ணம் நிறுவுதல் வேண்டும். இம்டாகுலோபிரிட் 17.8 எஸ்எல் ஹெக்டேருக்கு 200 எம்எல் அல்லது டைமீத்தோயேட் 30 இசி ஹெக்டேருக்கு 500 எம்எல் அல்லது தையோமீதாக்ஸம் 75 டபுள்யூ எஸ் ஹெக்டருக்கு 100 கிராம் அளவில் தெளித்தல் வேண்டும்.

தேவைப்பட்டால், 15 நாள் கழித்து மற்றொரு முறை இம்மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் உரிய வழிமுறைகளை கடைபிடித்து உளுந்து பயிரில் மஞ்சள்நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!