‛அடிப்படை நோக்கமே சிதைந்துவிட்டது’: வேளாண்மை பொறியியல் துறையினர் வேதனை..!

‛அடிப்படை நோக்கமே சிதைந்துவிட்டது’:  வேளாண்மை பொறியியல் துறையினர் வேதனை..!
X

வேளாண் பொறியியல்துறை (கோப்பு படம்)

‛மண்வளம், நீர் வளம்’ பாதுகாக்க மட்டுமே வேளாண்மை பொறியியல்துறை தோற்றுவிக்கப்பட்டது. தற்போது அந்த நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது என இத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.

மண்வளம் மற்றும் நீர்வளம் குறித்து வேளாண் பொறியியல்துறை கூறியதாவது:

மாநிலம் முழுவதும் ‛மண்வளம், நீர் வளத்தை’ பாதுகாக்க மட்டுமே வேளாண்மை பொறியியல்துறை உருவாக்கப்பட்டது. இத்துறை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாறைகள் நிறைந்த நிலங்கள் வளமான விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இத்துறை மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன. இப்படி படிப்படியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை போல் வேளாண்மை பொறியியல் துறையும் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் துறையாகவும், கட்டட கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் துறையாகவும் மாற்றப்பட்டது.

தற்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் புதிய துறை தொடங்கப்பட்டு, வேளாண்மை பொறியியல்துறை செய்து வந்த நீர்வள மேம்பாட்டு பணிகள் அனைத்தும் புதிய துறையிடம் வழங்கப்பட்டு விட்டன. தற்போது அரசு வழங்கியுள்ள வேலைகளில் மண்வள பாதுகாப்பும் குறைக்கப்பட்டு விட்டது.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை திட்டங்களுக்கு உதவும் ஒரு சார்பு துறையாக வேளாண்மை பொறியில்துறையினை மாற்றி விட்டனர். தவிர வேளாண்மைத்துறை சார்ந்த அத்தனை திட்டங்களுக்கும் கட்டடங்கள் கட்டும் பணிகளும் வழங்கப்பட்டு விட்டன. ஆக நாங்கள் ‛நீர் வளம், நிலவளம் மேம்பாடு’ என்ற பிரிவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறோம்.

எந்த நோக்கத்திற்காக இத்துறை உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் முற்றிலும் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. தற்போது நாங்களும் மற்ற துறைகளைப்போல் வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு கூடுதல் துறையாக செயல்பட்டு வருகிறோம். வேளாண்மை பொறியியல்துறையிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு தற்போதய நிலையில் தேவைப்படாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil