நிலஅளவீடு செய்ய பணம் கேட்டா 'இந்த' எண்ணுக்கு கூப்பிடுங்க: கலெக்டர்
நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விபரம்:
பாலசுப்ரமணியன் (விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்): தமிழகம் முழுவதும், ஒன்றரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கவில்லை. கூட்டுறவு வங்கியில் கடன் தரவில்லை என்றால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயிர்கடன் பெற்று சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராக உள்ளனர்.
நில அளவீடு செய்வதற்கு காலதமாதம் செய்வதுடன், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம், அதிக அளவில் பணம் பறிக்கின்றனர். எனவே இது சம்மந்தமாக புகார் தெரிவிக்க, டோல் ஃபரீ நம்பர் அளிக்க வேண்டும்.
ஸ்ரேயா சிங் (கலெக்டர்): நில அளவை செய்வதற்காக, அலுவலர்கள் விவசாயிகளிடம் சட்டத்திற்கு புறம்பாக பணம் வாங்கக்கூடாது. அவ்வாறு பெறுவது குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால் 1800 4251997 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பெரியதம்பி (விவசாயி): மாவட்டத்தில் பல பகுதிகளில், மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும்.
கணேசன் (தோடக்கலைத்துறை துணை இயக்குனர்): நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக, பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அதற்காக, ஒரு ஹெக்டேருக்கு, 2,000 ரூபாய் வீதம், பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள, ரூ. 62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுண்ணி உற்பத்தி செய்வதற்கு, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி, ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வையாபுரி (விவசாயி சங்க நிர்வாகி): தினமும், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் வீட்டில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால், குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும் என நிர்ணயம் செய்து அறிவித்தால், அதற்கேற்ப பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
சுந்தரம் (தமிழக விவசாயிகள் சங்க தலைவர்): விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு, பல்வேறு துறை உயர் அதிகாரிகள் வருவதில்லை. அதனால், முழுமையாக விளக்கம் பெறமுடியவில்லை.
கலெக்டர்: அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu