திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மகத்துவ மையம் திறப்பு: பொள்ளாச்சி எம்.பி., கலெக்டர் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்னை மகத்துவ மையம், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத் திட்டப் பயிற்சிகளை அளிக்க வேண்டுமென பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்' என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்பு நமது முன்னுரிமை என்ற மையக்கருத்துடன் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்துடன் இணைந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் 14 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இணைய வழியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகளிடையே பேசுகையில், நாட்டில் கிராமங்கள்தோறும் வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், விவசாயிகள் பாதுகாப்பு என்பது தற்போதைய அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், கிசான் கடன் அட்டை, பயிர் பாதுகாப்புத் திட்டம், மண்வள அட்டை போன்றவை விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சௌத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதன் ஒருபகுதியாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சண்முக சுந்தரம், தென்னைக்கான மகத்துவ மையத்தை தளியில் உள்ள வாரியத்தின் பண்ணை வளாகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த மையம் தரமான தென்னை கன்றுகளை வழங்குவதோடு, வெள்ளை ஈ தாக்குதல், கேரளாவில் பரவி வரும் வாடல் நோய் ஆகிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டுமெனவும் அவர் பேசினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினித் பேசுகையில், தென்னை மகத்துவ மையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இந்த நிகழ்வில், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர் பால சுதாஹரி, வேளாண் இணை இயக்குனர் ஆர்.வடிவேலு, 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu