மரவள்ளிக்கிழங்கு விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை
கோப்பு படம்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பாலப்பட்டி, எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு, அப்பளம் தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் பல வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கு வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை வீழ்ச்சி அடைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
தற்போது வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி அனுப்புவது குறைந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.1,000-ம் வரை சரிவடைந்ததால் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu