புளியக்குடியில் வயல்வெளி பயிற்சி பள்ளி: ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

புளியக்குடியில் வயல்வெளி பயிற்சி பள்ளி: ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்
X

வேளாண்மைத் துறை சார்பில், புளியக்குடி கிராமத்தில் நடைபெற்ற வயல்வெளி நிகழ்ச்சியில், ஆர்வமுடன் விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், மதுக்கூர் வட்டாரம் புளியக்குடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழான நெல் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

வயல்வெளி நிகழ்ச்சியில், புளியக்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்வமுள்ள 30 விவசாயிகள் கலந்து கொண்டு, நெல் விதை முதல் அறுவடை வரையிலான தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டனர். பங்கேற்ற விவசாயிகள், ஐந்து பேர் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, முன்னோடி இயற்கை விவசாயி விக்ரமம் பரமேஸ்வரி, அட்மா திட்ட அலுவலர் ஐயா மணி, சிசி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மணி ஆகியோரால் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

பின்னர், விவசாயிகள் அனைவரும் நெல் வயலில் நேரடியாக இறக்கி விடப்பட்டு, வயலில் இருக்கும் பூச்சிகளை பிடித்துக் கொண்டு வரச் செய்து நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிதல், அவற்றின் தாக்கம் போன்றவை விவசாயிகளுக்கு விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கையான முறையில் வேப்பங்கொட்டை கரைசல், மீன் அமினோ அமிலம், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல், திரவ உரம் பயன்பாடு, சூடோமோனாஸ் விதை நேர்த்தி போன்றவைகளும் விளக்கப்பட்டன.

வயல்வெளி பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நஞ்சையில் உளுந்து சாகுபடி பற்றியும் 50 சத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, கருவுற்ற சிலந்திகளை வீட்டிலேயே விவசாயிகள் பராமரித்து சிலந்தி குஞ்சுகள் 12 நாட்களில் வெளிவந்தபின் வயலில் நேரடியாக விடுவதன் மூலம் இரண்டரை ஏக்கருக்கு ஆயிரத்தி 500 சிலந்திகளை கொண்டு தீமை செய்யும் பூச்சிகளை மிக எளிதாக கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.

மதுக்கூர் வட்டாரத்துக்கான காப்பீட்டு நிறுவன அலுவலர் மணி, உளுந்து, கடலை, எள் போன்ற ரபி பயிர்களுக்கு காப்பீடு செய்வது பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். புளியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, வயல்வெளி பள்ளிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். வயல்வெளி பள்ளிகளால் எவ்வாறு எளிமையான முறையில் செலவின்றி பூச்சிகளை கட்டுப்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டதாக, இதில் பங்கேற்ற, புளியக்குடி விவசாயிகள் வேளாண் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க