தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வேளாண்துறை யோசனை

தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வேளாண்துறை யோசனை
X

தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு

Agriculture idea to destroy rhinoceros beetles attacking coconut tree

தென்னையில் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னைப்பயிர் 11968 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தாக்குதல் அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையும் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.

தாக்குதல் அறிகுறிகள்: காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று மொட்டுப் பகுதியை மென்றுவிடுகிறது. எஞ்சிய குருத்து விரியும்போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோன்றும். மொட்டுப்பகுதியை மென்ற பின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது. சில சமயங்களில் இளம் கன்றுகள் குறுத்;து அழிந்து விடுவதனால் மரம் வளர்ச்சி குன்றி காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: தென்னந்தோப்புகளில் சாய்ந்த தென்னைமரங்கள், மக்கும் நிலையில் உள்ள மரம் மட்டைகள், குப்பைகள், பாதிப்படைந்த தென்னை மரங்கள் ஆகியவற்றில் காண்டாமிருக வண்டுகளில் புழுக்கள் உற்பத்தியாகி பெருக வாய்ப்புள்ளதால் அவற்றை தோப்புகளிலிருந்து அப்புறப்படுத்தி தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற பச்சை மஸ்கார்டைன் எனும் பூஞ்சணத்தை தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.

மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும். கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூர் இனக்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.

வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தி பயன்பெற வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil