பயறு வகைகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண்மை விஞ்ஞானி தகவல்

பயறு வகைகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண்மை விஞ்ஞானி தகவல்
X

கோப்பு படம் 

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம்

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது தொடர்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைப்பயிர்களை, மார்கழி பட்டத்தில் விதைத்துள்ளனர். இதில் வம்பன் 8 மற்றும் ஆடுதுறை 5 என்ற உளுந்து ரகங்களும், கோ 8 என்ற பச்சை பயறு ரகங்களையும் விவசாயிகள் ஆங்காங்கே விதைத்துள்ளனர். தற்போது பயறு வகை பயிர்கள் பூ பூப்பதற்கு முந்தைய பருவத்தை அடைந்திருக்கும்.

இதற்கு இலை வழியாக 2 சதவீத டி.ஏ.பி. உரக்கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி உரத்தை பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2-வது முறையாக தெளிக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு ஒண்டர் (பயறு அதிசயம்) ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோவை பூ பூக்கும் தருணத்தில் தெளிக்கலாம். அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2-வது முறையாகவும் தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் உடன் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து பயன்படுத்த வேண்டும். பயறுவகை பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தலாம்.

பயறு ஒண்டர் பயன்படுத்தும்போது பூக்கள் உதிர்வது குறைந்து பயிரின் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வறட்சியை தாங்கும் தன்மையும் அதிகரிக்கும். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!