கறுப்பு சட்டை அணிந்து அதிமுக வினர் தர்ணா போராட்டம்; எடப்பாடி பழனிசாமி உள்பட 61 எம்எல்ஏ., க்கள் கைது

கறுப்பு சட்டை அணிந்து அதிமுக வினர் தர்ணா போராட்டம்; எடப்பாடி பழனிசாமி உள்பட 61 எம்எல்ஏ., க்கள் கைது
X

வள்ளுவர் கோட்டம் பகுதியில், ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக வினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தடையை மீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 61 எம்எல்ஏ க்களை, போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டசபை இரண்டாவது நாளான நேற்று நடந்தது. இதில், எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை, ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு, அவர் அதில் அமர்ந்திருந்தார். இதனால் ஆவேசமடைந்த இ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏ க்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவுபடி, சட்டசபையில் இருந்து சபை காவலர்களால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நேற்று ஒருநாள் முழுவதும், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர்களுக்கு, சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார்.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதற்கிடையே, சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் குறித்து, அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது. சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க, எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். போராட்டத்தின் குறியீடாக கறுப்பு சட்டையணிந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சட்டசபையில் நீதி வேண்டும்' என்று கோஷம் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பும் பதட்டமும் உருவானது.

இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட , எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்எல்ஏக்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி, ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்து சென்றனர். இ.பி.எஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சபாநாயகர் அப்பாவு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்படுகிறார். நடுநிலையாக சபாநாயகர் செயல்படவில்லை. கட்சி வேறு, சட்டசபை வேறு. எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கைதான் முக்கியம். ஏற்கனவே, ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்கும்படி கடிதம் கொடுத்துள்ளோம். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்த நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் சுக்கு, எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையை சபாநாயகர் வழங்கியது மாபெரும் தவறு. வேண்டும் என்றே திட்டமிட்டு, சட்டசபையில் இப்படி ஒரு விவகாரம் தி.மு.க தரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை. அதிமுக வை முடக்க நினைக்கும், அழிக்க துடிக்கும் ஸ்டாலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது, என்றார்.

திடீர் பதட்டம்: எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த போது பேட்டி எடுக்க விடாமல், போலீசார் செய்தியாளர்களை தடுத்து வெளியேற்ற முயற்சித்ததால்,பதட்டம் ஏற்பட்டது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், சில வினாடிகள் பரபரப்பானது. இதையடுத்து, போலீசார் இடையூறு செய்யாமல் ஒதுங்கி கொண்டனர்.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil