ஆவின் நிர்வாகத்தில் தொடரும் தகிடுதத்தம்...!: பால் முகவர், தொழிலாளர்கள் நலச் சங்கம் பகீர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பில் "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" வழங்கவில்லை. மாறாக, தனியார் தயாரிப்பை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை மீது தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு சுமத்தினார்.
இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில், ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருள் உற்பத்தியே இல்லை. ஆனால், இல்லாத பொருளை முன் வைத்து கடந்த மார்ச் மாதம் திட்டக்கமிஷன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், ஆவின் பொது மேலாளர் ராஜேந்திரன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் தனியார் தயாரிப்பு ஊட்டச்சத்து பொருளுக்கு மாற்றாக "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" வழங்கிட பரிந்துரை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சி தொடங்கி தற்போதைய திமுக ஆட்சி வரை ஆவினில் ஊழல், முறைகேடுகள் புரையோடிப் போயுள்ளது. இந்நிலையில், "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" குறித்து பொது மேலாளர் ராஜேந்திரன் எதன் அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார்..? என்கிற சந்தேகம் வலுத்தது.
இதனால், ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பரிசுப் பொருள் பெட்டகத்திற்கு பரிந்துரையை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர், அரசு செயலாளர், கமிஷனர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு தெரியாமல் ஒரு பொது மேலாளரால் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவெடுத்திருக்க முடியாது.
அதனால், ஆவின் பொது மேலாளரை அவ்வாறு கூறும்படி இயக்கியது யார்?, அவர் பின்னால் இருந்து முறைகேடுகள் செய்ய திட்டமிட்டது யார்? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அரசுக்கு வலியுறுத்தியது.
அதுமட்டுமன்றி "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" தயாரிப்பு தொடர்பாக பால்வளத்துறை சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் வெளியிடப்பட்டது ஏப்ரல்-13ம் தேதி என அமைச்சர்கள் தரப்பில் தவறான தகவல் கூறப்பட்டது.
இதனை வாதத்திற்காக ஒருவேளை சரி என எடுத்துக்கொண்டாலும், அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பு தொடர்பாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன் (மார்ச்) திட்டக்கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆவின் பொதுமேலாளர் "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" குறித்து எப்படி எடுத்துரைத்தார்? என்பது தெரியவில்லை.
மேலும் உற்பத்தியே செய்யப்படாத பொருளை வைத்து திட்டக்கமிஷன் கூட்டத்தில் விவாதம் நடத்தி அதனை அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் இணைக்க ஒப்புதல் அளித்து 8 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு பட்டியலில் தனியார் தயாரிப்பை நீக்கி விட்டு, ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்த்தது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
எனவே ஆவின் ஹெல்த் மிக்ஸ் தொடர்பான அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆவின் டெய்ரி ஒயிட்னர் எனப்படும் பால் பவுடரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் எனக் கூறி திட்டக்கமிஷன் முன் பரிந்துரை செய்யப்பட்டது அப்பட்டமாக தெளிவாகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu