மாஜி ஊழல் அமைச்சர்களை உடனே கைது செய்யுங்கள்: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஆவேசம்...!
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன்.
ஊழல் செய்த மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கை தாமதம் ஏன்? கேள்வி எழுப்பியுள்ள, ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளதாக கூறி இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய எதிக்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்கள் மீதும் அதற்கு துணைபோன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் அளித்தார்.
மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தனி நீதிமன்றம் அமைத்து ஊழல் அதிமுக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அத்தனை பேர் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள் என ஸ்டாலின் கூறினார். இது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது.
தி.மு.க 2021 ல் வெற்றி பெற்ற முதல் நாள் முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்பதற்கு முன் ஸ்டாலினை ஆம் ஆத்மி கட்சி சார்பில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தினேன். இதையடுத்து, அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களிடம் நான் பேட்டி தரும்போது, புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் முதல் பணியாக ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள். அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.
முன்னதாக, சட்டசபை தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாகவே குறிப்பிட்டு இருந்த தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏராளமான புகார்கள், அதற்கான ஆதாரங்களுடன் இருந்தும் பயன் இல்லை.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே சி வீரமணி உள்ளிட்ட சிலர் மீது மட்டுமே எப்.ஐ.ஆர் போடப்பட்டு இருந்தாலும் யாரும் இதுவரை ஊழல் வழக்கில் கைது செய்யப்படவில்லை, ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் அடிப்படை விசாரணை கூட இன்னும் சரியாக தொடங்கவில்லை.
மேலும் அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர்களாக பணியாற்றிய, ஊழலில் மலிந்த எந்த ஆணையர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் மோகன் ராவ் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊழல் புகார் கடுமையாக இருக்கிறது. இதுகுறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தாமதம் ஏன்? என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
டெல்லியில், ஆம்ஆத்மி கட்சி ஆட்சி போல தமிழகமும் கல்வியிலும், சுகாதாரத்திலும் வளர்ச்சியை தரவேண்டும் என்ற நல்ல நோக்கில் ஸ்டாலின் டெல்லிக்கு சென்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கியுள்ள உலகத்தரம் வாய்ந்த அரசு பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பார்த்து வந்தது பாராட்டுக்குரியது.
கெஜ்ரிவால் ஆட்சியின் வெற்றிக்கு காரணம் ஊழல் இல்லாத ஆட்சியை தந்ததும் இந்தியாவிலேயே கடன் இல்லாத மாநிலமாக டெல்லியை மாற்றியிருப்பது தான். அதேபோல, தமிழகத்திலும் மக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுத்து, உடனே கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu