பாப் பாடல்கள் கேட்ட இளைஞருக்கு தூக்கு: அதிபர் கிம் ஜாங் வுன் வழங்கிய தண்டனை
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
வடகொரியாவில் பாடல் மற்றும் திரைப்படம் பார்த்த 22 வயது இளைஞருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வகுத்த சட்டத்தின்பேரில் பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வடகொரியா.. தற்போது உள்ள நாடுகளில் மர்மதேசமாக இருக்கும் நாடு. இந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இங்கு தேர்தல் என்பது நடத்தப்படுவது இல்லை. வொர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் நார்த் கொரியா (Workers Party of North Korea) என்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான் காலம் காலமாக அதிபராக உள்ளனர்.
கிட்டத்தட்ட மன்னராட்சி போன்று தான் அதிபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் II ஜாங் முதலில் அதிபராக இருந்தார். அதன்பிறகு தந்தை கிம் ஜாங் இல் அதிபராக இருந்தார். இதையடுத்து கிம் ஜாங் உன் அதிபராக தொடர்கிறார். வடகொரியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. மற்றபடி பிற நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது இல்லை. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதோடு அமெரிக்காவுக்கு அடிக்கடி மிரட்டல் விடும் செயலையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது.
இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியாவில் இணையதளம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களுக்கும் குறிப்பிட்ட சிகை அலங்காரம் மட்டுமே செய்ய வேண்டும். பெண்கள் லிப்ஸ்ட்டிக் பயன்படுத்த கூடாது என்பது உள்பட ஏராளமான கட்டுப்பாடுகள் வடகொரியாவில் அமலில் உள்ளதாககூறப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு வசதி கூட அந்த மக்களுக்கு கிடையாது. அரசு சார்பில் வழங்கப்படும் 2 சேனல்களை மட்டுமே பார்க்கலாம். அதிலும் எப்போதும் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த செய்திகள் மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது.
இதனால் வடகொரியாவில் கிம் ஜாங் உன் மக்களை அடிமை போல் நடத்துகிறார். மக்களுக்கான அடிப்படை சுதந்திரத்தை அவர் வழங்கவில்லை என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் கிம் ஜாங் உன் மட்டும் தனது செயல்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை. இத்தகைய சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது
அதாவது வடகொரியாவில் 22 வயது இளைஞர் பொதுவெளியில் தூக்கிட்டு கொல்லப்பட்டுள்ளாராம். இதற்கு பின்னணியில் அவர் கே - பாப் பாடல்கள் கேட்டதும், 3 திரைப்படங்களை பார்த்ததும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கே பாப் (K Pop) என்பது பிரபலமான கொரிய இசை பாடல்களாகும். இது பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. இது தென்கொரியாவில் உருவானது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில் இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக வடகொரியா மனித உரிமைகள் என்ற தலைப்பில் ‛தி கார்டியனில்' செய்தி வெளியடப்பட்டுள்ளது. அதில், வடகொரியாவின் தென் ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் 70 தென்கொரிய பாடல்கள் மற்றும் மூன்று திரைப்படங்களை பார்த்துள்ளார். மேலும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். இதுதொடர்பாக குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாசாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டம் என்பது மேற்குலக கலாசாரத்தில் இருந்து வடகொரியா மக்களை பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்டது. தென்கொரியாவின் திரைப்படம் மற்றும் பாடல்களை பார்த்த பலரும் நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும். இப்படியான அடிமையான வாழ்க்கை வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என்று தெரிவித்துள்ளனர்'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu