அமெரிக்க வரலாற்றில் அதிபராக ஒரு பெண்கூட ஏன் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை?

அமெரிக்க வரலாற்றில் அதிபராக ஒரு பெண்கூட ஏன் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை?
X

கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் 

1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு, 248 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண் அதிபர் கூட இல்லை.

வளர்ச்சி அடையாத நாடுகள்கூட பெண் ஏற்று செயல்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் இதுவரை அப்படி இருந்ததில்லை.

1960ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக, இலங்கையின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஒரு நாட்டின் பிரதமராக பெண் பொறுப்பேற்றது அதுவே முதல்முறை.

1966 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்திரா காந்தி பிரதமராகவும், 1969-ல் கோல்டா மேயர் இஸ்ரேல் பிரதமராகவும் பதவியேற்றனர்.

மார்கரெட் தாட்சர் 1979 முதல் 1990 வரை 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரதமராக இருந்தார். ஐரோப்பாவின் முதல் பெண் பிரதமரும் இவரே ஆவார். 1986ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் அதிபராக கோராசோன் அகீனோ தேர்வானார்.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தான்கூட, பெனாஸீர் பூட்டோவை பிரதமராக தேர்வு செய்தது. மற்றொரு இஸ்லாமிய நாடான துருக்கியிலும் 1993–1996 வரை தன்சு சில்லர் பிரதமராக இருந்தார்.


பின்லாந்து, நியூஸிலாந்து, போலந்து, லித்துவேனியா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் பெண்கள் தலைமை வகித்துள்ளனர்.

ஏஞ்சலா மெர்கல் 2005-ல் ஜெர்மனியின் அதிபராக இருந்துள்ளார்.

தெற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் 2006 முதல் 2018 வரை எலன் ஜான்சன் சர்லெஃப் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் கூட இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி தேர்வானார். அவர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர்.

உலகத்தில் 1960 முதல் பல்வேறு காலகட்டங்களாக 55 நாடுகளில் பெண்கள் தலைமை வகித்துள்ளனர்.

சுதந்திரம் மற்றும் பெண்ணுரிமை என உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக தன்னை பிரசாரம் செய்துகொள்ளும் அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் வியத்தகு அரசியல் வரலாற்றைப் பற்றி பார்க்கலாம்

மனித உரிமைகள், ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் பேசும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு பெண்கூட அதிபர் பதவி வகித்ததில்லை. அமெரிக்கா மட்டுமல்ல, சீனா, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷியா, செளதி அரேபியா ஆகிய நாடுகளிலும் பெண்கள் தலைமை வகித்ததில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள்கூட பெண்களைத் தலைமைப் பொறுப்பேற்க தேர்வு செய்யும் நிலையில், அமெரிக்கா ஏன் செய்யக் கூடாது? ஏன் செய்யவில்லை?

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1920-ல் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அப்போதிருந்து, அமெரிக்காவில் தேர்தல்களில் மட்டும் வாக்களித்து வரும் பெண்கள், ஒருமுறைகூட தலைமைப் பதவியை அடையவில்லை.

அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகளில் பொய்கள் மூலம் பரப்பப்படும் பாலின பாகுபாடு இதற்கு முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் பல செனட்டர்கள் உயர் பதவிக்கு போட்டியிட்டனர், ஆனால் ஒவ்வொருவராக அவர்கள் தேர்தலுக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு போட்டியிலிருந்து விலகிய எலிசபெத் வாரன் பேட்டியின்போது, அமெரிக்க தேர்தலில் பாலின பாகுபாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அவரின் குற்றச்சாட்டு வெறும் புலம்பல் என நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்க வாக்காளர்களிடம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்கள் மிகவும் திறமையானவர்கள் என்று கருதுகின்றனர். அரசியலில் பெண்களைக் காட்டிலும் ஆண் தலைவர் மேன்மையானவர்கள் என வாக்காளர்கள் கருதுகின்றனர். மேலும், பெண் வேட்பாளர்கள் தவறான தகவல்களால் குறிவைக்கப்படுகின்றனர்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், தனது தோல்விக்கு பிறகு பல்வேறு சவால்களை சந்தித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்ற முதல் பெண் இவரே.

எனினும் பிரசாரத்தின்போது பாலினம் குறித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். அழிவுகரமான இரட்டை தரத்திலான கருத்துகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் உடன் மோதி அடைந்த தோல்விக்கு பிறகு டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முதலில் களம் கண்ட விக்டோரியா ஹூதுல், 1872 ஆம் ஆண்டு போட்டியிட்டார்; தோற்றார். 2024-ல் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இன்றைய இந்த நிலையை அடைய அமெரிக்க பெண்களும், பெண் வேட்பாளர்களும் கடுமையான சவால்களைச் சந்தித்துள்ளனர்.

1931-ல் ட்ரூஸ்லோ ஆடம்ஸ் எழுதிய 'தி எபிக் ஆஃப் அமெரிக்கா' என்ற புத்தகத்தில், தி அமெரிக்கன் ட்ரீம் என்ற பகுதியில், நாட்டில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சமூகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் சரிவிகிதமாக கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஆனால், அதிபர் ஆக வேண்டும் என்ற பெண்களின் கனவு மட்டும் இன்னும் நனவாகாமலேயே உள்ளது. இம்முறை, பாலினப் பாகுபாடு, நிறவெறி என அனைத்துத் தடைகளும் தகர்க்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான கமலா ஹாரிஸ் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாறு எழுதப்பட வேண்டும் என்று உலகம் முழுவதுமுள்ள பெண்ணிய ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இம்முறையாவது அது நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!