முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைது, ஜாமீனில் விடுவிப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் முறையாக சரணடைவதற்காக மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை வந்தடைந்தார். மியாமியில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் வாகனங்கள் அணிவகுக்க செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்
மியாமி நீதிமன்றத்தில் அதிகாரிகளிடம் முறையாக சரணடைந்த பின்னர் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக என்பிசி நியூஸ் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக தன் மீதான 37 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்துள்ளார். டிரம்பின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஜூரி விசாரணையை கோரினர்.
இந்நிலையில், அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் டொனால்டு டிரம்ப், அவரது உதவியாளர் வால்ட் நவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏற்கனவே, ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்ப்-பின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu