உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்
ரஷிய ராணுவம் (கோப்பு படம்)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியர்கள் சிலர் போர்க்களத்தில் இறங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை உடனடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற அந்நாட்டிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உக்ரைனைக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு போர் களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
அதாவது, உக்ரைனுக்கு உதவ அதன் அண்டை நாடுகள் மற்றும் சில தன்னார்வலர்கள் போர் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதேபோல ரஷ்யா தரப்பிலும், சிலர் போர்க்களத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று பேர் இருக்கின்றனர். இவர்களிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டு, ஏஜென்சி ஒன்று திட்டமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை எப்படி பயன்படுத்துவது என அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் வழங்கியிருக்கிறது. இதனையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் கடந்த ஜனவரி முதல் இவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த மூவரில் ஒருவர் தப்பிக்க முயன்றபோது, அவரை ரஷ்ய படையினர் பிடித்து, மிரட்டல் விடுத்து மீண்டும் போர் களத்திற்கே அனுப்பி வைத்துள்ளனர். இவர்களிடம் ஊதியமாக ரூ.1.95 லட்சமும், போனசாக ரூ.50,000 வழங்கப்படுவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இவர்களை மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
"ரஷ்யா-உக்ரைன் போரிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் எச்சரிக்கையுடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளோம். ரஷ்ய ராணுவத்தில், ராணுவ உதவியாளர் பணிக்கு மூன்று இந்தியர்கள் கையெழுத்திட்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இது தொடர்பான விஷயத்தை ரஷ்ய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த மூன்றுபேரும் நேரடியாக ரஷ்ய ராணுவத்தில் இல்லாமல், அதன் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவில் இனணந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வாக்னர் ராணுவக் குழு, ரஷ்யாவுக்கு கட்டுப்பட்டிருந்தாலும், தன்னிச்சையாக இயங்கும் திறன் கொண்டது என்பதால், மூன்று இந்தியர்களை மீட்பதில் கால தாமதம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu