டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியே விருது வழங்கி கௌரவிப்பு
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கிய பிரான்ஸ் அரசு.
டாடா குழுமத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தியதற்காக சந்திரசேகரனுக்கு செவாலியர் விருதை வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபரின் சாா்பாக, அந்நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சா் கேத்தரீன் கொலோனா செவாலியா் விருதை அவருக்கு வழங்கினாா்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரஃப், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினயன் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். மேலும் சந்திரசேகரனின் மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து டாடா குழுமம் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியா – பிரான்ஸ் இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்துவதில் பங்காற்றியதற்காக டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரான்ஸின் உயரிய செவாலியா் விருது வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ஓப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது இந்தியா – பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது.
மேலும் கடந்த மாதம் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டின் உயரிய விருதான ‘Order of Australia’ விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu