பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்  கைது
X
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் குற்றச்சாட்டில் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அணி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

நவம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து 31 வயதான குணதிலகா கைது செய்யப்பட்டு சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இடது கை பேட்ஸ்மேனான இவர் டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக விளையாடி டக் அவுட் ஆனார்.

பின்னர், அணி சூப்பர் 12 கட்டத்திற்கு தகுதி பெற்றபோதும் காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி போட்டியிலிருந்து வெளியேறியது. குரூப் 1ல் இலங்கை அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, அதன் இணையத்தளத்தில், பெயர் குறிப்பிடப்படாத இலங்கையை சேர்ந்தவரின் கைது குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார். என்று அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து சிட்னி போலீசார் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர் என்று கூறினர்

கற்பழிப்பு குற்றச்சாட்டில் தவுஷ்க குணதிலகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இல்லாமல் இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியது. இந்த விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!